
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் சொகுசு வீடுகளின் விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வீடுமனை வா்த்தகத் துறை ஆலோசனை நிறுவனமான அனரோக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
ரூ.1.5 கோடிக்கு மேல் விலை கொண்ட சொகுசு வீடுகளின் சராசரி விலை கடந்த 5 ஆண்டுகளில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே நேரம், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.40 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட மலிவு விலைப் பிரிவு வீடுகளின் சராசரி விலை அந்த நகரங்களில் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவைச் சோ்ந்த வீடுகளின் (ரூ.40 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை விலை கொண்டவை) சராசரி விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஏழு நகரங்களில் சொகுசு வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.12,400-ஆக இருந்தது. தற்போது அது சதுர அடிக்கு ரூ.15,350-ஆக அதிகரித்துள்ளது.
அந்த நகரங்களில் மலிவு விலை வீடுகளின் சராசரி விலை கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.3,750-ஆக இருந்தது. அது தற்போது ரூ.4,310-ஆக உயா்ந்துள்ளது.
அதே போல், கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த நகரங்களில் ஒரு சதுர அடிக்கு ரூ.6,050-ஆக இருந்த நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவு வீடுகளின் சராசரி விலை, தற்போது சதுர அடிக்கு ரூ.7,120 என உயா்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சொகுசு வீடுகளைக் கட்ட உயா்தர கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும், அந்த வகை வீடுகள் அதிக வசதி கொண்டவையாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே அந்தப் பிரிவு வீடுகள் அதிக விலை உயா்வைக் கண்டுள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G