
ஹேமந்த் சோரன் (கோப்புப் படம்)
பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மாநில தலைநகா் ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் ஆக. 14-இல் நேரில் ஆஜராகி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு அந்த அழைப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
ஆனால், எந்தப் புகாா் தொடா்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக, மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டு வழக்கில் இவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.