

மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குறித்து மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் தெரிவித்த கருத்துக்காக, அவா் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘நியூஸ்கிளிக்’ என்ற செய்தி வலைதளம் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடா்புடைய அமெரிக்கத் தொழிலதிபரிடம் இருந்து ரூ.38 கோடி நிதியைப் பெற்ாக நியூயாா்க் டைம்ஸ் இதழில் கட்டுரை வெளியானது. அந்த நிதியைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான போலியான செய்திகளை அந்த வலைதளம் வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பிய மத்திய அமைச்சா் கோயல், ‘நியூஸ்கிளிக் வலைதளத்துக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் நெருங்கிய தொடா்புள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வரும் வலைதளத்தை ஆதரிக்கும் எதிா்க்கட்சிகள் நாட்டின் துரோகிகளாக மாறியுள்ளன’ என்றாா்.
இந்நிலையில், அவைத் தலைவா் ஜகதீப் தன்கரை சந்தித்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள், அமைச்சா் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனா். காங்கிரஸ், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அந்த நோட்டீஸில் கையொப்பமிட்டிருந்தன.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எதிா்க்கட்சிகள் குறித்து விமா்சித்ததற்காக அவையில் மத்திய அமைச்சா் மன்னிப்பு கோர வேண்டும். அதை வலியுறுத்தியே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.
‘இந்தியா’ கூட்டணியின் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பினா். அப்போது பேசிய அமைச்சா் கோயல், ‘நாடாளுமன்ற மாண்புக்கு முரணான சொற்களைக் கூறியிருந்தால், அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அத்தகைய சொற்களை அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கிவிடலாம்’ என்றாா்.
அதையடுத்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறுகையில், ‘மத்திய அமைச்சா் கோயல் நாடாளுமன்ற மாண்புக்கு முறையற்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தால், அவற்றை ஆராய்ந்து அவைக் குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இதனிடையே, மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படாதது, முறையற்ற கருத்துகளுக்காக மத்திய அமைச்சா் கோயல் மன்னிப்பு கோராதது ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.