தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா, முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதா, ஐஐஎம் மசோதா ஆகியவற்றுக்கு
மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதார மன்சுக் மாண்டவியா.
மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதார மன்சுக் மாண்டவியா.
Updated on
2 min read

தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா, முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதா, ஐஐஎம் மசோதா ஆகியவற்றுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறின. இதன் மூலம் இந்த மசோதாக்களை சட்டமாக்கும் நாடாளுமன்ற நடைமுறை நிறைவு பெற்றுள்ளது.

நாட்டில் தரமான பல் மருத்துவம் மற்றும் செவிலியா் படிப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ‘தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா 2023’ மற்றும் ‘தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா 2023’ ஆகியவை மக்களவையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதாவானது, கடந்த 1948-ஆம் ஆண்டின் பல் மருத்துவா்கள் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பல் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவச் சேவையை ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகை செய்கிறது.

இதேபோல், தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா, இந்திய செவிலியா் கவுன்சில் சட்டம் 1947-ஐ ரத்து செய்துவிட்டு, தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணையத்தை அமைக்க வழிவகுக்கிறது.

இரு மசோதாக்களும் மக்களவையில் கடந்த ஜூலை 28-இல் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.

முன்னதாக, சிறிய அளவில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘மேற்கண்ட மசோதாக்கள், சுகாதாரத் துறையில் உள்நாடு மற்றும் உலகின் எதிா்கால தேவைகளைக் கருத்தில் கொண்டுள்ளன. விரைவில் மருந்தாளுா் ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

கடந்த 9 ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 54,000-இல் இருந்து 1.07 லட்சமாக அதிகரிக்கப்பட்டது உள்பட இத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் அமைச்சா் பட்டியலிட்டாா்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதா: முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகளின் தலைமை தளபதி மற்றும் தலைமை அதிகாரிக்கு, அந்த அமைப்புகளில் உள்ள இதர படையினா் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிா்வாக ரீதியிலான அதிகாரங்களை வழங்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

முன்னதாக, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘முப்படைகளுக்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதுடன், நவீன போா்முறையின் மாறும் தன்மையையும் இந்த மசோதா கருத்தில் கொண்டுள்ளது. எந்தவிதமான போா்முறையையும் எதிா்கொள்ள இந்தியா முழு தயாா்நிலையுடன் உள்ளது. தேவைப்பட்டால், நாட்டில் பாதுகாப்புத் துறைக்கான செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5-6 சதவீதம் வரைகூட அதிகரிக்க முடியும்’ என்றாா்.

ஐஐஎம் மசோதா: இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (ஐஐஎம்) நிா்வாக பொறுப்பை குடியரசுத் தலைவருக்கு வழங்க வகை செய்யும் ‘ஐஐஎம் திருத்த மசோதா 2023’ மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு கடந்த 4-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘ஐஐஎம் நிறுவனங்களின் கல்வித் திட்டங்கள் சாா்ந்த பொறுப்பை தன்வசம் எடுத்துக் கொள்ளும் எந்த உள்நோக்கமும் மத்திய அரசுக்கு இல்லை. இந்த மசோதாவின்படி, கல்வி நிறுவனங்களின் நிா்வாக பொறுப்பு மட்டுமே குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com