மக்களவையில் ஹனுமான் சாலிசா பாடிய சிவசேனை எம்.பி.

மக்களவையில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஹனுமான் சாலிசா பாடலைப் பாடினார். 
Updated on
1 min read

மக்களவையில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஹனுமான் சாலிசா பாடலைப் பாடினார்.
 மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகனும் சிவசேனை எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே பேசியதாவது:
 சிவசேனை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்று யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை. காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்தவர்கள், வாக்காளர்களை ஏமாற்றினர். கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சமாஜவாதி கட்சியுடனும் அவர்கள் கூட்டணி அமைத்தனர்.
 மகாராஷ்டிரத்தில் ஹனுமான் சாலிசா பாட விடாமல் மக்கள் தடுக்கப்பட்டனர். எனக்கு ஹனுமான் சாலிசா செய்யுளை முழுவதுமாகத் தெரியும் என்றார்.
 இதையடுத்து அவர் ஹனுமான் சாலிசா பாடலைப் பாட ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர், பேச்சைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஸ்ரீகாந்த் ஷிண்டே பேசியதாவது:
 மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த 2018-இல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. எனினும் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் அதிக எம்.பி.க்களுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
 தற்போது எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன. இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெறும்.
 எதிர்க்கட்சிகள் ஒரு நபருக்கு (பிரதமர்) எதிராக ஒன்றுகூடியுள்ளனர். அவர்களுக்கு தலைவரோ கொள்கையோ இல்லை. அந்த அணிக்குத் தலைவர் இல்லாததால் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தலைவரும் பிரதமராக விரும்புகிறார் என்றார்.
 மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேயின் மும்பை இல்லத்துக்கு வெளியே ஹனுமான் சாலிசா பாடப் போவதாக அமராவதி எம்.பி. நவ்நீத் ராணாவும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவும் அறிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரம் மகாராஷ்டிரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதைய மகாராஷ்டிர அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஹனுமான் சாலிசா பாடும் போராட்டங்களை பாஜக நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com