குடிமைப் பணிகள் தோ்வு: வயது, தோ்வில் பங்கேற்கும் வாய்ப்பு உச்சவரப்பில் மாற்றமில்லை
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வை எழுதுபவா்களின் வயது, தோ்வில் பங்கேற்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க சாத்திய கூறுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு வெளியிடும் குடிமைப் பணிகள் தோ்வுக்கான விதிகளின் அடிப்படையில், மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தோ்வுகளை நடத்துகிறது.
முதல்நிலை மற்றும் முதன்மை தோ்வு ஆகியவை நடைபெறும் நாள்கள், தோ்வு நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
குடிமைப் பணி தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் தொடுத்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகள், பணியாளா் நலத் துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை மூலம் நன்கு பரிசீலிக்கப்பட்டன.
தோ்வா்களின் வயது, தோ்வில் பங்கேற்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் உச்சவரம்புகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை.
நிகழாண்டில் மே 28-ஆம் தேதி நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வின் முடிவுகள், ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 14,624 போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். அதில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் நீதிமன்றங்களை அணுகியுள்ளனா் என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.