

தமிழகத்தில் உள்ள 186 எய்ட்ஸ் மையங்களை மூடுவதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவாரை தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தில்லியில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1993 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழக மருத்துவத் துறை செயலரை தலைவராகக் கொண்டு பதிவு செய்யப்பட்ட இந்தச் சங்கத்துக்கு, தமிழகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 377 எய்ட்ஸ் தொடர்பான ஹெச்ஐவி பரிசோதனை மையங்கள் உள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (நாகோ) நிதியுதவியின் கீழ் இந்தச் சங்கம் செயல்படுகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 50 சதவீத எய்ட்ஸ் மையங்களை மூடுவதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தில்லியில் மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீண் பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனுஅளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அளித்த பின்னரும் நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான ஹெச்ஐவி நோய்த் தொற்றுடன் உள்ளனர். தமிழகத்தில் 1.43 லட்சம் பேர் உள்ளனர். எய்ட்ஸ் விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலையில் பரிசோதனை மையங்களை மூடினால், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முடங்கும் நிலைக்கு செல்லும்.
ஹெச்ஐவி பெரும்பாலும் விளிம்புநிலை பெண்களின் பிரச்னையாக இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தற்போது கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை 100 சதவீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பரிசோதனை மையங்களை மூடுவதற்கான உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மனுவில் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.