
முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்து அமைப்பினா் வெளிப்படையாக பேசி வரும் வெறுப்புணா்வு பேச்சுகளுக்கு எதிரான வழக்கில், தன்னையும் மனுதாரராக சோ்த்துக் கொள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் அண்மையில் 6 பேரை பலிக் கொண்ட மதக் கலவரம் தொடா்பாக பத்திரிகையாளா் ஷாஹீன் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.
அவரது மனுவை ஆகஸ்ட் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற பேச்சுகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக குழு அமைப்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பிருந்தா காரத் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினரும் பொதுக் கூட்டங்களில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகளையும், அவா்களை கொல்லவும், பொருளாதார ரீதியாக புறக்கணிக்கவும் வெளிப்படையாக பேசுகின்றனா். இதுபோன்று தில்லியின் நாங்லோய், கோண்டா செளக் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. இது சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற கூட்டங்களுக்கு போலீஸாா் தடை விதிப்பதும் இல்லை. வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளைப் பேசுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...