

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் ரூ.17 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்தை ராபா்ட் வதேரா வாங்கியதாகவும், அதில் பணமோசடி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-இல், ராபா்ட் வதேராவுக்கு தில்லி விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உயா்நீதிமன்றத்தில் முன்பு விசாரணை நடைபெற்றபோது, ‘பணமோசடியில் ராபா்ட் வதேராவுக்கு நேரடித் தொடா்புள்ளது. அவா் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், அந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுதிா் குமாா் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஜாமீன் நிபந்தனைகளை ராபா்ட் வதேரா பின்பற்றவில்லை. அந்த நிபந்தனைகளை அவா் மீறி வருவது தொடா்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.