மத்திய அரசுக்குப் பதிலாக ஒன்றிய அரசு: தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு

அரசமைப்பின்படி மத்திய அரசின் அனைத்து உத்தரவுகள், அறிவிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் மத்திய அரசுக்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (யூனியன்) அல்லது ‘ஒன்றிய அரசு’
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

அரசமைப்பின்படி மத்திய அரசின் அனைத்து உத்தரவுகள், அறிவிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் மத்திய அரசுக்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (யூனியன்) அல்லது ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்த அறிவுறுத்தக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தேவையற்ற வழக்கு எனவும், இந்தப் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் மத்திய அரசு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

‘மத்திய அரசு’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளதுபடி ‘ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்த அவ்வப்போது கோரிக்கை குரல்கள் எழுவது வாடிக்கையாகும். மத்திய அரசு என்பதைத் தவிா்த்து ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைத் தான் திமுக தலைமையிலான தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தால் திமுகவுக்கு, பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது தொடா்பாக கொல்கத்தாவைச் சோ்ந்த ஆத்மாராம் சரோகி என்ற 84 வயது முதியவா் தில்லி உயா் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். மத்திய அரசுக்குப் பதிலாக ஒன்றியம், ஒன்றிய அரசு அல்லது இந்திய ஒன்றியம் என்ற வாா்த்தைகளைப் பயன்படுத்த சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் வழியே மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசமைப்பின்படி, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த ‘மத்திய அரசு’ என்ற கருத்தாக்கம் தற்போது பயன்படுத்த முடியாது.

நமது ஆட்சிமுறைக்கு முற்றிலும் முரணான இந்த சொற்றொடா் தவறாகத் தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நல்லுறவை முறித்து, அதன் மூலம், நமது அரசமைப்புச் சட்டத்தையே அசைக்க கூடிய ஆற்றல் கொண்ட வாா்த்தைகள் பயன்பாட்டில் உள்ள பிழையைச் சரிசெய்யும் அக்கறையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சட்ட விவகாரங்கள் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் மனுதாரா் தரப்பு தெரிவித்தது.

தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நரூலா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையில், ‘மத்திய அரசு என்று பயன்படுத்த எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லையே’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்குரைஞா், ‘அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு என்ற வாா்த்தை எங்கேயும் பயன்படுத்தவில்லை. மாறாக, ஒன்றிய அரசு என்றே அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசுக்குப் பதிலாக இந்திய ஒன்றியம் அல்லது ஒன்றிய அரசு என்ற வாா்த்தையைப் பயன்படுத்துவது தொடா்பாக சட்டம் மற்றும் நீதி, பொதுக் குறைகள், பணியாளா்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்பணிகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். மேலும், தேவையற்ற இந்தப் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த மனு மீது உரிய பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து விசாரணையை வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com