
அமலாக்கத் துறை விசாரணையை தேசியவாத காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மத்திய அரசு உத்தரவிட்டதால் அவர்கள் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி விட்டதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்த அஜித் பவாரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் இவ்வாறு தெரிவித்தார். அஜித் பவாருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் சிவசேனை-பாஜக தலைமையிலான அரசின் கூட்டணியில் அண்மையில் இணைந்தனர்.
இதையும் படிக்க: மத்திய பிரதேசத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கேஜரிவால்!
இந்த நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய சரத் பவார், அமலாக்கத் துறை விசாரணையை தேசியவாத காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மத்திய அரசு உத்தரவிட்டதால் அவர்கள் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: கடந்த காலங்களிலும் இது போன்ற மாற்றங்கள் இருந்திருக்கின்றன. எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்களிடமிருந்து விலகி சென்றுள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் கட்சியிலிருந்து விலகி சென்றதாக கூறுவதில் உண்மையில்லை. அவர்களுக்கு எதிராக மத்திய அரசு அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதால் அவர்கள் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் தேசிவாத காங்கிரஸிலிருந்து விலகி மற்றொரு கட்சியுடன் (பாஜக) சேர அறிவுரை கூறப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேரவில்லையென்றால் அவர்கள் வேறு ஏதேனும் இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். ஆனால், சிலர் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ள துணிந்தனர். முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை தேசியவாத காங்கிரஸில் இருந்து விலக வலியுறுத்தியும் அவர் எங்களது கட்சியுடன் உறுதியோடு நின்றார். மகாராஷ்டிரத்தில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
இதையும் படிக்க: அண்ணன்-அண்ணி தற்கொலை: தாமதமான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரலை வெட்டிய தம்பி!
அஜித் பவார் கடந்த ஜூலை மாதத்தில் தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து ஆளும் சிவசேனை-பாஜக கூட்டணி அரசில் மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...