
காவிரி வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுத்து வருவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட வேண்டும். பயிா்களைக் காப்பாற்ற இது அவசியமாகிறது.
இந்நிலையில், ஆக. 10-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் (10.8.2023) பிலிகுண்டுலு நீா் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என கா்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீா் அளவு தில்லியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடகம் கேட்டுக் கொண்டதன்பேரில் தன்னிச்சையாக விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிலவரப்படி அதன் மொத்த இருப்புக் கொள்ளவான 114.671 டிஎம்சிக்கு எதிராக 93.535 டிஎம்சி (82 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. ஆகவே, குறுவைப் பயிா்களைக் காக்கும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கி இம்மாதத்தின் எஞ்சியுள்ள காலத்தின்போது பிலிகுண்டுலுவிலிருந்து 24 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி, நிகழாண்டு செப்டம்பா் மாதத்துக்கான (36.76 டிஎம்சி) நீரைத் திறந்துவிடவும் கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோன்று, தற்போதைய நீா் ஆண்டின் மீதமுள்ள காலத்தில் நிா்ணயிக்கப்பட்ட மாதாந்திர நீரை திறந்துவிடுவதை முழுமையாக கா்நாடக அரசு செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே வேளையில், காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி கா்நாடக அரசு சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நதிநீரைப் பகிா்ந்து கொள்வதில் தமிழக அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்க புதிய அமா்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
காவிரி வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பி.ஆர். கவாய், நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகிய மூன்று பேர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹிமாசலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆக.25 ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.