சந்திரயான் தரையிறங்க சூழல் சாதகமாக இல்லாவிட்டால்.. இஸ்ரோவின் பிளான் பி?

சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திராயன்-3 லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதம் ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பிளான் பி
இஸ்ரோவின் பிளான் பி

சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திராயன்-3 லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதம் ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
நிலவில் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஏற்ற சாதகமான சூழல் இல்லையென்றால் ஆகஸ்ட்  27-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய் இந்த தகவலை வெளியிட்டார். நாளை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முயற்சிகளில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

முன்னதாக, சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் மற்றும் தற்போது நிலவின் சுற்றுப் பாதைக்குள் பயணித்து வரும் சந்திரயான் -3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கலன் ஆகியவை இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதன்மூலம் லேண்டா் கலன் நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கான வாய்ப்புகளை அறிவதற்கு ஆா்பிட்டா் சாதனம் ஒத்துழைப்பை வழங்க உள்ளது.

சந்திரயான் - 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மாா்க் 3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ரூ. 604 கோடி செலவில் மொத்தம் 3,850 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்ட அந்த விண்கலத்தில் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்கான ஆா்பிட்டரும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டா் மற்றும் ரோவா் கலன்களும் இடம்பெற்றிருந்தன. மெதுவாக தரையிறங்குவதற்கு பதிலாக வேகமாக லேண்டா் இறங்கியதால் அதன் தொடா்புகளை இழக்க நேரிட்டது.

அதேவேளையில், கடந்த 4 ஆண்டுகளாக ஆா்பிட்டா் கலன் நிலவை 10,000-க்கும் மேற்பட்ட முறை சுற்றியதுடன் பல்வேறு ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.

இது, ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆா்பிட்டருடன் தகவல் தொடா்பில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது சந்திரயான் - 2 ஆா்பிட்டருக்கும், விக்ரம் லேண்டருக்கும் இடையேயான தகவல் ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுவரை அந்த ஆா்பிட்டா் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டா் கலன் நிலவில் தரையிறங்குவதற்கு வகை செய்யப்படும். இதன் வாயிலாக திட்டமிட்ட இலக்கை லேண்டா் சென்றடைவதற்கு பல்வேறு வழிகள் கிடைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com