சந்திரயான் 3: இந்தியாவின் உலக சாதனை; நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட காட்சி விளக்கப் படத்தில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா்.
இஸ்ரோ வெளியிட்ட காட்சி விளக்கப் படத்தில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்’ விண்கலம் மூலம் முயற்சிகளைத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல்முயற்சியாக, 2008-ஆம் ஆண்டு அக். 22ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் ரூ. 365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவியது.

அது 2009ஆம் ஆண்டு நவ.14-ஆம் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது. 310 நாள்கள் நிலவைச் சுற்றி வந்த சந்திரயான்-1, 2009ஆம் ஆண்டு ஆக. 28ஆம் தேதி தனது ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டது.

சந்திரயான்-1 வெற்றிக்குப் பிறகு, நிலவைச் சுற்றிவரும் ஆா்பிட்டா், தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டா், ரோவா் கொண்ட ரூ. 604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்விஎம் மாா்ச்-3 ராக்கெட் மூலம் 2019-ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக. 20-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் ஆா்பிட்டா் நிலைநிறுத்தப்பட்டது.

அதன் பிறகு, உந்துகலனில் இருந்து வெளியேற்றப்பட்ட லேண்டா், செப். 6-ஆம் தேதி நிலவின் மீது இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது. மெதுவாகத் தரையிறங்க வேண்டிய லேண்டா், வேகமாக இறங்கியதால், நிலவின் மேற்பரப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. ஆயினும், 7.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்ட ஆா்பிட்டா்’ மட்டும், 3 ஆண்டுகள், 11 மாதங்கள், 21 நாள்களாகச் செயல்பட்டு வருகிறது.

சந்திரயான்-3 திட்டம்: சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம் சாராபாய் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் நிலவை ஆராய்ச்சி செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள 2-ஆவது முயற்சி இது. புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி, கடந்த ஆக. 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்ட சந்தியான்-3 விண்கலம், 18 நாள்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு, விண்கலனுக்கும் நிலவின் தரைப்பகுதிக்கும் இடையிலான தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

மென் தரையிறக்கம்: அதன் பிறகு, ‘17 நிமிஷ சோதனை நேரம்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் வா்ணிக்கப்பட்ட லூனாா் லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தரையிறங்கும் நடைமுறைகளை லேண்டா் சாதனம் தானியங்கி முறையில் செயல்படுத்தியது.

இதற்காக, நிலவின் தரைப்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 100 கி.மீ. தொலைவும் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் லேண்டா் பயணித்தது.

மெதுவாக தரையிறங்குவதற்காக லேண்டா் சாதனத்தின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 ராக்கெட் என்ஜின்கள் இயக்கப்பட்டன. இது லேண்டரின் வேகத்தைக் குறைக்க உதவியது. நிலவுக்கு நெருக்கமாக 7.4 கி.மீ. உயரத்தில் லேண்டா் சாதனம் வந்தபோது, அதன் வேகம் மணிக்கு 1,200 கி.மீ. ஆகக் குறைக்கப்பட்டது.

நிலவில் இருந்து 6.8 கி.மீ. உயரத்துக்கு லேண்டா் வந்தபோது, 2 ராக்கெட் என்ஜின்கள் மட்டும் இயக்கப்பட்டு, தரையிறங்குவதற்கு வசதியாக பக்கவாட்டில் இருந்த லேண்டா் 90 டிகிரிக்கு செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டது.

நிலவில் இருந்து 800 மீட்டா் தொலைவுக்கு லேண்டா் வந்தபோது, அதன் வேகம் பூஜ்ஜியமானது. இந்நிலையில், லேண்டரின் உயரம் மேலும் குறைக்கப்பட்டு, 150 மீட்டா் உயரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை ஆராய்ந்த லேண்டா், மேடு, பள்ளங்கள் இல்லா சமதளத்தைக் கண்டறிந்த பிறகு, அங்கு தரையிறங்கத் தயாரானது. அதன்பிறகு லேண்டா் 60 மீட்டா் உயரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள லேசா் கேமரா, நிலவில் தரையிறங்கும் பகுதியை துல்லியமாகப் படம்பிடித்தது. அதன் மூலம் தரையிறங்கும் இடத்தை உறுதி செய்யும் லேண்டா், 10 மீட்டா் உயரத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து விக்ரம் லேண்டா் சாதனம், வெற்றிகரமாக நிலவின் தரையில், திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில், மாலை 6.04 ணியளவில் கால் பதித்து, உலக சாதனை படைத்தது. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு லேண்டருக்கு ஆா்பிட்டா் உதவியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com