விடைபெறுகிறதா ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா? 90களின் அடையாளம்..

ஒரே ஒரு புது ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா வாங்கியிருந்தால், அது நிச்சயம் அவர்களுக்கு பல நாள் கனவாக இருந்திருக்கலாம்.
விடைபெறுகிறதா ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா? 90களின் அடையாளம்..


பெங்களூரு: 90ஆம் ஆண்டுகளின் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களது பள்ளிப்பருவத்தில், ஒரே ஒரு புது ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா வாங்கியிருந்தால், அது நிச்சயம் அவர்களுக்கு பல நாள் கனவாக இருந்திருக்கலாம்.

எத்தனையோ பிராண்டுகள் வந்திருக்கும்.. வழக்கத்தில் இருக்கும். நாளடைவில் மறைந்து போயிருக்கும். ஆனால், சில பிராண்டுகளும், அதன் ஒரே ஒரு தனித்துவமான தயாரிப்பும் மக்கள் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதில் ஒன்றுதான் ரெனால்ட்ஸ் 045 பந்துமுனைப் பேனா.

எத்தனையோ பந்து முனைப் பேனாக்கள் இருந்தாலும் ரெனால்ட்ஸ் பேனா வைத்திருப்பதே ஒரு தனி பெருமிதம்தான்.

அதிலும், அந்த வெள்ளை நிறமும், அதற்கு மேலே இருக்கும் நீல மூடியும், ஒரு ஜம்மென்ற தோற்றத்தைக் கொடுத்து, அதைக் கையில் வைத்துக் கொண்டு எழுதுவதற்கே தனி விருப்பமாக இருக்கும். பல ஆண்டுகள் கழித்தும் அதன் தனித்துவம் மட்டும் மாறவில்லை. ஆனால், அதனை வாங்கிப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலைதான் மாறின.

உண்மையில், ரெனால்ட்ஸ் பேனா தயாரிப்பு அமெரிக்காவில்தான் தொடங்கியிருக்கிறது. அதுவும் 1945ஆம் ஆண்டுதான் 045 என்ற அடையாளம் கொண்ட பேனா தயாரிப்புத் தொடங்கியது. அதன்பிறகு, இந்த பிராண்ட் இந்தியாவில் விற்பனையாகத் தொடங்கி, பேனாக்களின் சிகரமாக விளங்கியது. இந்த நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்படாவிட்டாலும் இந்திய நிறுவனமாக இருந்து இந்திய கல்வியிலும், பணியிலும் முக்கிய இடம் பிடித்தது.

பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும் எளிமையாக இருக்கும். அப்போது அதிகம் விற்பனையான பேனாக்களில் இந்த 045 எப்போதும் முன்னணியில் இருக்கும். இந்த பேனாவின் தனித்துவம் என்னவென்றால், இந்த பேனாவின் இங்க் எப்போதும் லீக் அடிக்காது என்பதே.

இதில்லாமல், தங்களுடைய பேனா என்பதை அடையாளப்படுத்த, 045 பேனாவின் முன்பகுதியில் உள்ள நீல நில பகுதிக்குள், சிறிய காகிதத்தில் பெயரை எழுதி அதனை அதற்குள் நுழைத்துவிட்டு, மூடிவிட்டால் போதும். பேனா யாருடையது என்பதை மூடியை திறந்ததும் காட்டிக்கொடுக்கும்.

பலருக்கும் கனவாகவும், விருப்பமாகவும் இருந்த 045 வகை பேனா, தற்போது பல்வேறு பேனாக்களின் வரத்துகளால் பயன்பாட்டில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. இதன் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தியால், 90 கால பிள்ளைகள் சற்று மன வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் பழைய பொருள்களை சேமித்து வைக்கும் வழக்கம் உடையவர்களின் கையில் நிச்சயம் இந்தப் பேனா ஒன்று இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com