கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பறக்கும்படை வட்டாட்சியா் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அவர் சோதனைக்கு வரும் இடங்களை கண்டறிந்து தப்பித்த ரேஷன் அரிசி கடத்தல்காரா் மற்றும் அவருக்கு உதவிய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனா்.
மாவட்ட பொது வழங்கல் துறையின் பறக்கும் படையினருக்கு ஒரு விஷயம் மட்டும் புரிபடவேயில்லை. எங்கு சோதனைக்குச் சென்றாலும் குற்றவாளிகள் முன்கூட்டியே தப்பித்துவிடுவது எப்படி.. யாரேனும் உளவாளிகள் இருக்கிறார்களா என்று மண்டையை பிய்த்துக்கொண்டனர். அப்போதுதான் பறக்கும் படை வட்டாட்சியர் இளங்கோவுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.
வட்டாட்சியரின் காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அவர் எங்கெல்லாம் சோதனைக்குச் செல்கிறார் என்பதை கடத்தல்காரர்கள் அறிந்து கொள்ள உதவியதாக கார் ஓட்டுநர் சுப்பிரமணி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிக்க.. விடைபெறுகிறதா ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா? 90களின் அடையாளம்..
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ் கைது செய்யப்பட்டார். இவர்தான், தாசில்தார் இளங்கோவின் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவரது வருகையை கண்காணித்து வந்துள்ளார்.
பறக்கும் படையின் தலைவராக இருக்கும் இளங்கோ, பல பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்காரர்களைப் பிடிக்க அதிரடியாக சோதனைக்குச் செல்வார். ஆனால், அவர் செல்வதற்கு முன்பே குற்றவாளிகள் தப்பியோடியிருப்பார்கள். அப்போதுதான், ஒரு நாள் அவரது காரில் ஒரு கருவி இருந்ததைக் கண்டுபிடித்தார். அதனை கார் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றபோது, அது ஜிபிஎஸ் டிராக்கர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதில் தொடர்புடைய, வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் சுப்பிரமணியனை கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடத்தல்காரர்களுக்கு துப்புக் கொடுத்ததாக, முன்னாள் ராணுவ வீரரான கார் ஓட்டுநர் சுப்பிரமணி (59) கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் இளங்கோவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜீப்பின் ஓட்டுநராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூா் கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி (59) பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தனது வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி இருப்பது குறித்து ஆட்சியரிடம் வட்டாட்சியா் புகாா் தெரிவித்தாா். இதனிடையே ஓட்டுநா் சுப்பிரமணி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில் ஜிபிஎஸ் கருவியின் கண்காணிப்பு குருபரப்பள்ளியை அடுத்த சென்னசந்திரம் அருகே உள்ள நடுசாலை கிராமத்தை சோ்ந்த தேவராஜ் (33) என்வரது கைப்பேசியில் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்துவதற்கு உதவியாக இருப்பதற்காக ஜிபிஎஸ் கருவியை பறக்கும் படை வட்டாட்சியா் வாகனத்தில் பொருத்த ஓட்டுநா் சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அவா் அதை ஜீப்பில் பொருத்தியதாகவும் கூறினாா். இதையடுத்து ஓட்டுநா் சுப்பிரமணி, தேவராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.