
கோப்புப் படம்
அசாமில் பாஜக எம்.பி. வீட்டில் இருந்து சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் பாஜக எம்.பி. ராஜ்தீப் ராயின் வீடு உள்ளது. இங்கிருந்து 10 வயது சிறுவனின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்பு உடற்கூராய்வுக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கச்சார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரதா சென் கூறுகையில், கழுத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் காணப்பட்டது. சிறுவனின் தாயார் தோலாய் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இரண்டரை ஆண்டுகளாக பாஜக தலைவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பாத எம்.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...