
கோப்புப்படம்
விஜயவாடா: ஆந்திரா மாநிலம், பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் ரூ.6.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கிலோ கடத்தல் தங்கத்தை விஜயவாடா சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
துபை மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு தங்கம் கடத்துதாக கடந்த வெள்ளிக்கிழமை (ஆக 25) விஜயவாடா சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், விஜயவாடா பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், சென்னையில் இருந்து விஜயவாடா நோக்கி வந்த காரை சுங்கத்துறை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் 4.3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. பின்னர் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில், 6.8 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தாள்களை (குவைத் தினார், கத்தார் ரியால், ஓமன் ரியால்) பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது லேண்டர்: இஸ்ரோ தகவல்
விசாரணையில், துபை மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் என்பதும், அதில் இருந்த வெளிநாட்டு முத்திரைகளை அழிப்பதற்காக தங்கத்தை உருகச் செய்து விஜயவாடாவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டவரை சனிக்கிழமை சுங்கச் சட்டம், 1962 இன் விதிகளின் கீழ் கைது செய்து விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 13 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில், விஜயவாடா சுங்க (தடுப்பு) ஆணையரகம் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான 70 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...