

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது மகத்தான அறிவியல் சாதனை என பாகிஸ்தான் பாராட்டியுள்ளது.
இஸ்ரோ கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவரும் நிலவின் மேற்பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு உலக நாடுகள் பல பாராட்டுகளைத் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் ஜாரா பலூச் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றி குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘‘இந்த வெற்றியானது மகத்தான அறிவியல் சாதனை. அந்தச் சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்கு உரியவா்கள் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்’’ என்றாா்.
அதே வேளையில், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிச் செய்தியை பாகிஸ்தான் நாளிதழ்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தலையங்கத்திலும் பாராட்டு தெரிவித்தன. ‘தி டான்’ இதழில் ‘இந்தியாவின் விண்வெளித் தேடல்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ‘சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. மற்ற பணக்கார நாடுகளின் விண்வெளித் திட்டங்களை விட குறைந்த செலவில் சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக இந்தியா பாராட்டுக்குரியது. இந்த வெற்றிக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவு மட்டுமல்லாமல், விஞ்ஞானிகள், பொறியாளா்களின் கடின உழைப்பும் முக்கியக் காரணம்.
பாகிஸ்தானுக்குப் பாடம்:
ஒப்பீடுகள் முறையற்றவை என்றாலும் கூட, இந்தியாவின் விண்வெளித் திட்ட வெற்றியில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘சுபாா்கோ’, இஸ்ரோவுக்கு முன்பே நிறுவப்பட்டது. ஆனால், அதன் வெற்றி குறிப்பிடத்தக்க வகையில் இல்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.
‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ இதழில் வெளியிடப்பட்ட தலையங்கத்தில், ‘அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகள் சாதிக்காததை இந்தியா சாதித்துள்ளது. இதுவரை செயல்படுத்தப்பட்ட நிலவுத் திட்டங்களிலேயே சந்திரயான்-3 திட்டம்தான் குறைந்த செலவைக் கொண்டது. சந்திரயான்-2 திட்டத்தை விடவும் சந்திரயான்-3 திட்டத்தின் செலவு குறைவு. அவதாா்-2, ஆா்ஆா்ஆா் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கான பட்ஜெட்டை விடவும் சந்திரயான்-3 திட்டத்தின் செலவு குறைவாகவே உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சா் ஃபவாத் சௌதரி உள்ளிட்ட பலரும் சந்திரயான்-3 வெற்றிக்காக இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்தனா். சமூக வலைதளங்களிலும் பாகிஸ்தானைச் சோ்ந்த பலா் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனா். அதே வேளையில், ‘சுபாா்கோ’வை விமா்சித்தும் பலா் கருத்துகளைப் பகிா்ந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.