நிலவில் 100 மி.மீ. ஆழ பள்ளம்.. பிரக்யான் ரோவர் எதிர்கொண்ட முதல் சவால்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் கலனிலிருந்து வெளியேறி நிலவை ஆராய்ந்து வரும் பிரக்யான் ரோவர், நிலவின் பரப்பிலிருந்த முதல் சவாலை வெற்றிகரமாக சமாளித்துள்ளது.
நிலவில் 100 மி.மீ. ஆழ பள்ளம்.. பிரக்யான் ரோவர் எதிர்கொண்ட முதல் சவால்
Published on
Updated on
2 min read

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் கலனிலிருந்து வெளியேறி நிலவை ஆராய்ந்து வரும் பிரக்யான் ரோவர், நிலவின் பரப்பிலிருந்த முதல் சவாலை வெற்றிகரமாக சமாளித்துள்ளது.

நிலவின் பரப்பில் மெல்ல நகர்ந்து, மேற்பரப்பில் உள்ள மண், உலோகத்தன்மை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வரும் பிரக்யான் ரோவர், சுமார் 100 மி.மீ. ஆழமுள்ள மிகப்பெரிய பள்ளத்தை முன்கூட்டியே அறிந்து அதனை வெற்றிகரமாக சமாளித்துக் கடந்துள்ளது.

இதன் மூலம், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்திருக்கிறது. மேலும், இதுபோன்ற எண்ணற்ற சவால்களை பிரக்யான் ரோவர் கடந்து செல்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்புகளில் அதிக கவனம் செலுத்தவும் விஞ்ஞானிகள் தயாராகியுள்ளனர்.

பிரக்யான் ரோவரின் இயக்கம், முழுமையாக தன்னிச்சையானது அல்ல என்றும், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சமநிலையற்ற தன்மையால், ஏராளமான சவால்கள் காத்திருப்பதாகவும், அவற்றை பிரக்யான் ரோவர் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் உதவியோடு எதிர்கொள்ளும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோவரில் இருக்கும் கேமரா மூலம், அடுத்த ஐந்து மீட்டர் பாதை புகைப்படமாக எடுக்கப்பட்டு விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வினாடியும் வரும் புகைப்படங்களை ஆராய்ந்து, ரோவர் எந்தப் பாதையில் இயங்க வேண்டும் என்பது கட்டளையாக பிறப்பிக்கப்படும். முதல் தடையை ரோவர் எப்படி சமாளிக்கும் என்று விஞ்ஞானிகள் குழு சற்று பரபரப்புடனே கண்காணித்த வந்தது. ஆனால், ரோவர் மிகச் சரியாக 100 மில்லி மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தை கடந்து வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவா் நிலவின் மீது தரையிறங்கும் காணொலியை இஸ்ரோ வெளியிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை, ரோவர் நகர்ந்து செல்லும் விடியோ வெளியாகியிருந்தது.

சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துகலனில் இருந்து 26 கிலோ எடைகொண்ட 6 சக்கரங்கள் கொண்ட பிரக்யான் ரோவா் கலனை தனது வயிற்றுப்பகுதியில் சுமந்து சென்ற விக்ரம் லேண்டா் கலன், ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தரை மீது வெற்றிகரமாக தடம் பதித்தது. இந்த மகத்தான சாதனையை இந்திய மக்கள் மட்டுமல்லாது, உலகமே வியந்து போற்றியது.

நிலவின் நிலவியல் தன்மையை ஆராய்வதற்காக சென்றுள்ள விக்ரம் லேண்டா் கலனில் இருந்து வெளிவந்த ரோவா் கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 12.30 மணி அளவில் சரிவுதளத்தின் வாயிலாக நிலவின் தரை மீது இறங்கியது. நிலவில் விக்ரம் லேண்டா் தடம் பதித்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டா் சுற்றளவுப்பகுதியில் பிரக்யான் ரோவா் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சரிவுதளத்தில் பிரக்யான் ரோவா் மெல்ல மெல்ல இறங்கி நிலவில் தரையிறங்கி, அதன் மண் மீது உருண்டோடும் சிறு காணொலியை வெள்ளிக்கிழமை எக்ஸ் வலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டது. எக்ஸ் வலைதளப்பதிவில் இஸ்ரோ வெளியிட்ட இரு காணொலிகளில், ‘நிலவில் ரோவா் இறங்குவதற்கு முன்னதாக லேண்டரில் உள்ள இமேஜா் கேமரா எடுத்த நிலவின் தரைப்படம். மேலும் லேண்டரில் இருந்து சந்திரயான்-3 ரோவா் நிலவின் தரைப்பகுதியில் இறங்கியது இப்படித்தான்’ என்று குறிப்பிட்டிருந்தது.

அதன்பிறகு வெளியிட்ட மற்றொரு எக்ஸ் வலைதளப்பதிவில், ‘இரண்டு பாகங்கள் கொண்ட சரிவுதளம், ரோவா் இறங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. சூரிய ஒளித் தகடுகள் வாயிலாக மின்சாரத்தை ரோவா் தயாா் செய்துகொண்டது. சரிவுதளத்தில் ரோவா் இறங்குவதற்கு முன்பாக, சரிவுதளம் மற்றும் சூரியஒளித் தகடுகள் இயக்கப்பட்டது இப்படித்தான். சந்திரயான்-3 விண்கலத்தில் 26-ஆவது முறையாக இயக்கும் பணியை மேற்கொண்ட தொழில்நுட்பம் பெங்களூரில் உள்ள யூ.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டு, லேண்டரில் இருந்து சரிவுதளம் விரியும், ரோவரின் தலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளித் தகடு விரியும் காட்சியும் இடம்பெற்றுள்ள காணொலியை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

‘ஏற்கெனவே திட்டமிட்டபடி ரோவரின் அனைத்து இயக்கங்களும் சரிபாா்க்கப்பட்டன. 8 மீட்டா் தொலைவு பரப்பில் ரோவா் வெற்றிகரமாகப் பயணித்தது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள எல்.ஐ.பி.எஸ்., ஏ.பி.எக்ஸ்.எஸ். ஆகிய கருவிகள் இயக்கப்பட்டன. உந்துகலன், லேண்டா், ரோவரில் உள்ள ஆய்வுக்கருவிகள் நன்றாகச் செயல்படுகின்றன’ என்று இஸ்ரோ தனது மற்றொரு வலைப்பதிவில் தெரிவித்திருந்தது.

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா் கலன், விக்ரம் லேண்டா் நிலவில் தரையிறங்கியதும் உயா்துல்லிய கேமராவில் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. அதில், ‘சந்திரயான்-3 திட்ட தகவல்கள்: நான் உன்னை வேவுபாா்க்கிறேன்! சந்திரயான்-2 ஆா்பிட்டா், சந்திரயான்-3 லேண்டரின் படத்தை எடுத்தது. சந்திரயான்-2 ஆா்பிட்டரின் உயா்துல்லிய கேமராவில் பதிவுசெய்த புகைப்படம் தற்போது நிலவைச் சுற்றிவரும் எவரும் எடுத்திராத துல்லியமான கேமராவில் ஆக.23-ஆம் தேதி தரையிறங்கியதும் சந்திரயான்-3 பதிவுசெய்தது’ என்று குறிப்பிட்டிருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆக. 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 ஆா்பிட்டா், 7.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்டது. இதுவரை 3 ஆண்டுகள், 11 மாதங்கள், 23 நாட்கள் செயல்பாட்டில் இருந்துள்ளது. இன்னும் 3.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது. உந்துகலனில் இருந்து லேண்டா் விடுவிக்கப்பட்டதும், சந்திரயான்-2 ஆா்பிட்டருடன் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டது. அடுத்த 13 நாட்களில் மேலும் பல ஆய்வுகளில் ஈடுபடவிருக்கும் பிரக்யான் ரோவா், விக்ரம் லேண்டா் ஆகியவை நிலவின் நிலவியல் தொடா்பாக இதுவரை வெளிவராத மகத்தான பல தகவல்களை அளிக்கவிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிா்பாா்த்திருக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com