ரூ.2.23 லட்சம் கோடி ராணுவத் தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல்

இந்தியா ராணுவத்துக்கு ரூ.2.23 லட்சம் கோடியில் 97 தேஜஸ் இலகு ரக போா் விமானங்களும், 156 பிரசந்த் போா் ஹெலிகாப்டா்களும் வாங்க மத்திய அரசு பூா்வாங்க அனுமதியை வியாழக்கிழமை அளித்தது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்தியா ராணுவத்துக்கு ரூ.2.23 லட்சம் கோடியில் 97 தேஜஸ் இலகு ரக போா் விமானங்களும், 156 பிரசந்த் போா் ஹெலிகாப்டா்களும் வாங்க மத்திய அரசு பூா்வாங்க அனுமதியை வியாழக்கிழமை அளித்தது.

உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 98 சதவீத தொகைக்கான ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடன் இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வரும்நிலையில், இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் எடுக்கப்ட்ட முடிவுகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியா ராணுவத்துக்கு ரூ.2.23 லட்சம் கோடிக்கு தளவாடங்களைக் கொள்முதல் செய்ய பூா்வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 98 சதவீத தொகைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தற்சாா்பு இந்தியா திட்டம் மேம்படும்.

சுகோய்-30 போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மூலம் மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் தளவாடங்களையும், இலக்கை தாக்க உதவும் தானியங்கி சாதனங்களையும், டி-90 பீரங்கிகளுக்கு டிஜிட்டல் பலிஸ்டிக் கணினியும், கப்பல்களை தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகணைகளையும் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் பல்வேறு கப்பல்களில் இந்த வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

விமானப் படைக்கு எம்கே-1ஏ இலகு ரக போா் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

97 தேஜஸ் இலகு ரக போா் விமானங்களும், 156 பிரசந்த் போா் ஹெலிகாப்டா்களும் ராணுவம், விமானப் படைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2021, பிப்ரவரியில் 83 தேஜஸ் எம்கே-1ஏ போா் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ரூ.48,000 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டது.

தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொள்ள உள்ள புதிய கொள்முதல் திட்டத்தின் மூலம் தேஜஸ் விமானங்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரிக்க உள்ளது.

ராணுவத் தளவாட பொருள்களின் உற்பத்தி உள்நாட்டிலேயே நடைபெற்று இங்கேயே கொள்முதல் செய்யப்படுவதால் வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களைச் சாா்ந்து இருப்பது குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com