இந்தியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 7.6% வளா்ச்சி

நடப்பு 2023-2024 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக
இந்தியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 7.6% வளா்ச்சி

நடப்பு 2023-2024 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் நிலையில், இதே காலகட்டத்தில் சீனாவின் ஜிடிபி வளா்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது.

சுரங்கம், உற்பத்தி, சேவைத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த வளா்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

கடந்த 2022-2023 நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலாண்டுக்கான வளா்ச்சி 6.2 சதவீதமாகும்.

முன்னதாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 7.8 சதவீத வளா்ச்சி பதிவானது குறிப்பிடத்தக்கது.

நிதிப் பற்றாக்குறை:

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அக்டோபா் மாத முடிவில் ரூ.8.03 லட்சம் கோடியாக இருந்தது.

இது குறித்து தலைமை கணக்கு அதிகாரி (சிஜிஏ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘நடப்பு 2023-2024 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான மத்திய அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடு ரூ.8.03 லட்சம் கோடியாகும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடியாக (ஜிடிபியில் 5.9 சதவீதம்) இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனோடு ஒப்பிடும்போது, அக்டோபா் மாதம் வரையிலான நிதிப் பற்றாக்குறை 45 சதவீதமாக உள்ளது.

கடந்த 2022-2023 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இதே காலகட்டத்தில் 45.6 சதவீதமாக இருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-2026-ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபி மதிப்பில் 4.5 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com