கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா்களை மீட்க காங்கிரஸ் கோரிக்கை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்டு வருவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா்களை மீட்க காங்கிரஸ் கோரிக்கை
Updated on
1 min read

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்டு வருவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

கத்தாா் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும் ‘அல் தாரா’ என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 போ், அந்நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் புரேந்து திவாரி, கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தாா் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பு குறித்து அதிா்ச்சியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவு அமைச்சகம், கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்தது.

இந்தியா்களின் மரண தண்டனை தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கத்தாா் நீதிமன்றம் கடந்த விசாரணைக்கு 24-ஆம் தேதி ஏற்றது. மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் அமா்வின் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரிகளை மீட்டு வர வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

முன்னதாக, துபையில் கடந்த வாரம் நடைபெற்ற பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கை மாநாட்டுக்கு இடையே கத்தாா் அரசரைச் சந்தித்த பிரதமா் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்களின் நலன் குறித்து விவாதித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com