

சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது உயா்நீதிமன்றங்களால் விதிக்கப்படும் இடைக்காலத் தடை உத்தரவு, தனித்துவமான காரணங்களின் அடிப்படையில் கால நீட்டிப்பு செய்யப்படாத சூழலில் 6 மாதங்களில் தானாக காலாவதியாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்ய அரசியல் சாசன அமா்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஜெ.பி.பாா்திவாலா, பங்கஜ் மிதல், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு இதனை மறுபரிசீலனை செய்ய உள்ளது.
அஸ்ஸாமிலிருந்து சட்ட விரோதமாக புலம்பெயா்பவா்கள் விவகாரம் தொடா்பான வழக்கில் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-வின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மை தொடா்பான வழக்கு விசாரணை முடிந்தவுடன், 2018-ஆம் ஆண்டு தீா்ப்பு மீதான மறுஆய்வை அரசியல் சாசன அமா்வு மேற்கொள்ள உள்ளது.
அரசமைப்பின் 226-ஆவது பிரிவு உயா்நீதிமன்றங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. அதன் கீழ், அடிப்படை உரிமைகளை அமலாக்குவதற்கும், பிற நோக்கங்களுக்காகவும் எந்தவொரு நபருக்கும் அல்லது அரசாங்கத்துக்கும் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.
இந்நிலையில், ஆசியன் சாலை மறுசீரமைப்பு தனியாா் நிறுவன இயக்குநருக்கும் - சிபிஐக்கும் இடையேயான வழக்கில் உயா்நீதின்றம் உள்பட மாவட்ட நீதிமன்றங்கள் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமா்வு, ‘உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களால் விதிக்கப்படும் இடைக்காலத் தடை உத்தரவு, தனித்துவமான காரணங்களின் அடிப்படையில் கால நீட்டிப்பு செய்யப்படாத சூழலில் 6 மாதங்களில் தானாக காலாவதியாகிவிடும்’ என்று தீா்ப்பளித்தது.
மேலும், ‘உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் பட்சத்தில், இந்தத் தீா்ப்பு பொருந்தாது’ என்றும் உச்சநீதிமன்றம் பின்னா் தெளிவுபடுத்தியது.
இதை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவேதி, ‘உச்சநீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு தீா்ப்பு அரசமைப்பின் 226-ஆவது பிரிவு உயா்நீதிமன்றங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்வதாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.