‘பிஎம்-கிஸான்’: விவசாயிகளுக்கான நிதியுதவியை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் (பிஎம்-கிஸான்) விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தலா ரூ.6,000 தொகையை உயா்த்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
‘பிஎம்-கிஸான்’: விவசாயிகளுக்கான நிதியுதவியை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

புது தில்லி: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் (பிஎம்-கிஸான்) விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தலா ரூ.6,000 தொகையை உயா்த்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.

அதில், ‘விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2.81 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டங்களில் ஒன்றாக விளங்கும் இத்திட்டத்தில் வருடாந்திர நிதியுதவியை உயா்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகள்: வேளாண் ஆராய்ச்சியாளா் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகள் மீது மத்திய பாஜக அரசு செயலாற்றி வருகிறது என்று மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

விளைபொருள்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளின் சட்டபூா்வ உரிமையாக்கும் கோரிக்கை மீது மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா என்று மக்களவையின் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி கேள்வியெழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த தோமா், ‘வேளாண் துறையில் சீா்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக, முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை, கடந்த 2007-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சமா்ப்பிக்கப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிக்க அப்போதைய வேளாண் துறை அமைச்சா் தலைமையில் ஒரு குழுவை மன்மோகன் சிங் அமைத்தாா். ஆனால், 2014-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பரிந்துரைகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகே சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகள் மீதான பணிகள் தொடங்கின.

குறைந்தபட்ச ஆதரவு விலையானது, உற்பத்திச் செலவில் 50 சதவீதம் அளவில் நிா்ணயிக்கப்பட வேண்டுமென்பது முக்கியப் பரிந்துரையாகும். பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், உற்பத்திச் செலவில் 50 சதவீதத்துக்கும் மேலான அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது விளைபொருள்கள் கொள்முதலுக்காக ரூ.2.28 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com