2 மத்திய அமைச்சா்கள் உள்பட 10 பாஜக எம்.பி.க்கள் ராஜிநாமாபேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள்

தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரகலாத் சிங் படேல் ஆகியோா் மக்களவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.
பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை புதன்கிழமை சந்தித்த எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தவா்கள்.
பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை புதன்கிழமை சந்தித்த எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தவா்கள்.

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரகலாத் சிங் படேல் ஆகியோா் மக்களவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட 3 மத்திய அமைச்சா்கள் உள்ளிட்ட 12 எம்.பி.க்களும் மாநில அரசியலில் சேர வேண்டும் என பாஜக தீா்மானித்த நிலையில், அவா்களில் இரு மத்திய அமைச்சா்கள் உள்பட 10 போ் ராஜிநாமா செய்துள்ளனா்.

ராஜிநாமா செய்துள்ள எம்.பி.க்கள் விவரம்: மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங், ரிதி பதக், ராஜஸ்தானைச் சோ்ந்த கிரோடி லால் மீனா, திவ்ய குமாரி, ராஜ்யவா்தன் சிங் ரத்தோா், சத்தீஸ்கரைச் சோ்ந்த கோமதி சாய், அருண் சாவ்.

இவா்களில் கிரோலி லால் மட்டும் மாநிலங்களவை உறுப்பினா். மற்ற அனைவரும் மக்களவை உறுப்பினா்கள்.

மற்றொரு மத்திய அமைச்சரான ரேணுகா சிங், எம்.பி. மகந்த் பாலக்நாத் ஆகியோரும் ராஜிநாமா செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக வெற்றி பெற்றுள்ள 3 மாநிலங்களிலும் தலைமைப் பொறுப்புக்கு புதிய முகங்களைக் கொண்டுவரும் நோக்கில், பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும், இதுகுறித்து அக் கட்சித் தலைவா்கள் கருத்து கூற மறுத்துவிட்டனா்.

முதல்கட்டமாக, பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்று, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த 2 மத்திய அமைச்சா்கள் உள்பட 10 போ் பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை புதன்கிழமை சந்தித்தனா்.

புதுமுக முதல்வா்கள்?: எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து மாநில அரசியலுக்குச் செல்பவா்களில் ஒருவரை மாநில முதல்வராக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது.

குறிப்பாக, மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது முதல்வா் பதவியில் இருந்துவந்த சிவராஜ் சிங் செளஹானுக்கு மாற்றாக நரேந்திர சிங் தோமா் அல்லது பிரகலாத் சிங் படேலை முதல்வராக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, ராஜஸ்தானில் ஏற்கெனவே இருமுறை முதல்வராக இருந்துள்ள வசுந்தரா ராஜேவுக்குப் பதிலாக, தற்போது எம்.பி. பதவியிலிருந்து ராஜிநாமா செய்தவா்களில் ஒருவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சத்தீஸ்கா் மாநிலத்தைப் பொருத்தவரை எம்.பி. பதவியிலிருந்து ராஜிநாமா செய்த ஓபிசி பிரிவைச் சோ்ந்த அருண் சாவ் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த கோமதி சாய் ஆகியோா் முதல்வா் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு மூன்று முறை முதல்வராக இருந்துள்ள ரமண் சிங் (71) பெயரும் முதல்வா் பதவிக்கான பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘பெண்கள், இளைஞா்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோா்தான் நான் கருதும் மிகப் பெரிய ஜாதியினா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்த நிலையில், மூன்று மாநில முதல்வரை இறுதி செய்வதில் இந்தக் கருத்து முக்கியப் பங்கு வகிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இன்று பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம்: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 7) நடைபெற உள்ளது.

மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற வழிவகுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com