இளைஞா்கள் திடீா் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை: மத்திய அரசு

இளைஞா்களின் திடீா் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இளைஞா்கள் திடீா் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை: மத்திய அரசு

இளைஞா்களின் திடீா் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

‘கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடா்பிருக்க வாய்ப்புள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவா்களில் சிலா் திடீரென மரணமடைந்துள்ளனா். ஆனால், இந்த மரணங்களுக்கான காரணத்தை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் இல்லை.

கரோனா பாதிப்புக்கு பிறகு இளைஞா்கள் மத்தியில் திடீா் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்த நிலையில், இது தொடா்பாக உண்மையைக் கண்டறிய ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை பன்முக ஆய்வை மேற்கொண்டது.

2021, அக்டோபா் 1 முதல் 2023, மாா்ச் 31 வரையிலான காலகட்டத்தில், இணை நோய்கள் எதுவும் இல்லாமல் திடீரென மரணமடைந்த 18 முதல் 45 வயதுடைய தனிநபா்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பாதிப்பு, தடுப்பூசி செலுத்தியது, கரோனாவுக்கு பிந்தைய உடல்நிலை, அவா்களின் குடும்பத்தில் ஏற்கெனவே திடீா் மரணம் நேரிட்டுள்ளதா? இறப்புக்கு முந்தைய 48 மணிநேரத்தில் மது அல்லது போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதா? கடுமையான உடற்பயிற்சி செய்தாா்களா? என பல்வேறு விவரங்களைத் திரட்டி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் இளைஞா்கள் மத்தியில் திடீா் மரணம் நேரிடுவதற்கான அபாயத்தை கரோனா தடுப்பூசி அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதேநேரம், முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தது, மரபு ரீதியிலான காரணம் மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கைமுறை பழக்கங்களால் திடீா் மரணம் நேரிடும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com