ஒவ்வொரு நாளும் 158 தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்: மல்லிகார்ஜுன கார்கே

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 158 தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்: மல்லிகார்ஜுன கார்கே

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று (டிசம்பர் 10) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை, மனிதாபிமானத்துடன் இருப்பதில் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 75வது ஆண்டு நிறைவில், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மறுக்கமுடியாத உரிமைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.

இனம், ஜாதி, மதம், நிறம், பாலினம், மொழி, பிறப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களையும் சமமான மனிதர்களாக கருத வேண்டும்.

"அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி" என்பதே இந்த ஆண்டு மனித உரிமை தினத்திற்கான கருப்பொருளாக உள்ளது.

இந்தச் சூழலில், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின் சமீபத்திய தரவுகளைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, 2015 முதல், இந்தியாவின் தினசரி கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகள் 87% அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் தினமும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். 2022-ஆம் ஆண்டில் மட்டுமே 15,783 வேலையில்லாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நம் நாட்டில் தினமும் 158 தலித்துகள் மற்றும் 28 ஆதிவாசிகள் தாக்கப்படுகிறார்கள். 2022ல் மூத்த குடிமக்களுக்கு எதிராக 28,545 குற்றங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 2,878 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர் என்று என்சிஆர்பி அறிக்கை கூறுகிறது.

கண்ணியம் மற்றும் சமத்துவம் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

பாகுபாடு மற்றும் பிளவுகளுக்கு எதிராக, சமூகத்தின் வலுவான குரலால் மட்டுமே மனித உரிமைகளை நிலைநிறுத்த முடியும்.” என்று தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com