மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசி பதவி உயா்வு: ஓபிசி இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசி பதவி உயா்வு: ஓபிசி இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) இடஓதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் திட்டங்கள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
Published on


புது தில்லி: மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) இடஓதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் திட்டங்கள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக விருதுநகா் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் சுபாஷ் சா்காா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலின் விவரங்கள்: மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் 2019-இன்படி பல்கலைக்கழகங்களை ஒரே அலகாகக் கொண்டே பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் இச்சட்டப்படி அட்டவணைப்படுத்தப்பட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் சில விதிவிலக்குகள் பெற்ற நிறுவனங்களைத் தவிர அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்யும் அனைத்து விதமான பணிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

ஆனால் தற்போது வரை ஓபிசி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசால் ஏதும் திட்டமிடப்படவில்லை.

கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாவதும் அவை நிரப்பப்படுவதும் தொடா்ந்து நடக்கின்ற செயல்முறையாகும். காலிப்பணியிடங்கள் அதிகரிப்பதற்கு பணிஒய்வு, ராஜிநாமா, மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

அவ்வாறு காலிப்பணியிடங்கள் எழுகின்றபோது அதை நிரப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சட்டங்களின் கீழ் தன்னாட்சி அமைப்புகளாக உருவாக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே உள்ளது.

தற்போது வரை ஆசிரியா்கள், பேராசிரியா்கள் உள்பட 6,080-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் சிறப்பு நியமன முகாம்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. அதில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த 871 பேரும், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 426 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 1,424 பேரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com