உயிர்காத்த ஆயுதங்களாக.. யாரோ வீசிச்சென்ற பாட்டிலும் ஒரு குண்டு பல்பும்

ஆழ்துளைக் கிணறுக்குள் யாரோ வீசிச் சென்று சிக்கியிருந்த பிளாஸ்டிக் பாட்டிலும் வெளியிலிருந்து அனுப்பிய ஒரு குண்டு பல்பும் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.
உயிர்காத்த ஆயுதங்களாக.. யாரோ வீசிச்சென்ற பாட்டிலும் ஒரு குண்டு பல்பும்

புவனேஸ்வரம்: ஆழ்துளைக் கிணறுக்குள் யாரோ வீசிச் சென்று சிக்கியிருந்த பிளாஸ்டிக் பாட்டிலும் வெளியிலிருந்து அனுப்பிய ஒரு குண்டு பல்பும் ஒடிசா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் கடுங்குளிருக்கு இடையே, ஆழ்துளைக் கிணறுக்குள் பச்சிளம் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டு அழுதக் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காவல்துறையினருக்குத் தகவல்  கொடுத்தனர்.

குழந்தையை யாரும் சொந்தம் கொண்டாடாத நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை உயிரோடு மீட்கப்பட்டது.

குழந்தை ஆழ்துளைக் கிணறுக்குள் விழுவதற்கு முன்பு, யாரோ வீசிச் சென்ற ஒரு குடிநீர் பாட்டில், கிணறுக்குள் இருந்த இரும்புக் குழாயை அடைத்தபடி சிக்கிக் கொள்ள அதன் மீது குழந்தை விழுந்துள்ளது. அந்த பாட்டிலால், குழந்தை நேராக ஆழ்துளைக் கிணறின் தரைப்பகுதியில் விழாமலும், அங்கிருக்கும் உடைத்த கண்ணாடி பாட்டில்கள் மீது குழந்தை விழுந்து உயிருக்கு ஆபத்து நேரிடாமலும் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுங்குளிர் காலம் என்பதால், குழந்தை இருந்தப் பகுதிக்கு அருகே ஒரு 100 வாட் மின்சார குண்டு பல்பு அனுப்பப்பட்டது. கடுங்குளிரால் குழந்தைக்கு எதுவும் ஆகாமல், அப்பகுதி வெதுவெதுப்பாக இருக்க இந்த குண்டு பல்பு உதவியது. மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது குழந்தை ஓரிடத்தில் அழுகையை நிறுத்திவிட்டது. பிறகு இந்த குண்டு பல்பு அனுப்பப்பட்டதும் மீண்டும் குழந்தையின் அழும் குரல் கேட்டது. தொடர்ந்து குழந்தை குளிரில் நடுங்காமல் இந்த பல்பு காத்துள்ளது.

இதுதான், மருத்துவமனைகளிலும், குழந்தைகள் சீதோஷண நிலையில் இருக்க வைக்கப் பயன்படுத்தும் முறை என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தை சிக்கியிருந்த இரும்புக் குழாயை அறுக்கும்போதும், குழந்தையை வெளியே எடுக்கும்போதும் மீட்புக் குழுவினருக்கு எண்ணற்ற சவால்கள் காத்திருந்தன. குழந்தை ஓயாமல் அழுதுகொண்டிருந்ததும், குழந்தை இருக்கும் இடத்தை கண்டறியவும், குழந்தையை மீட்க வேண்டும் என்ற உத்வேகத்தை மீட்புக் குழுவினருக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குழந்தையை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். சிறப்பு விமானம் மூலம் குழந்தை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நீடூழி வாழவும் முதல்வர் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

20 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக் கிணறுக்குள் பச்சிளம் குழந்தை விழ வாய்ப்பில்லை என்றும், யாரோ வேண்டுமென்றே அதற்குள் வீசியிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இப்பகுதியைச் சேராத யாரோதான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com