எம்.பி.க்கள் இடைநீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்; இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
எம்.பி.க்கள் இடைநீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்; இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்!

இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

தில்லியில் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகள் பங்கேற்றன. தமிழகத்திலிருந்து திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். 

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சுமார் 3 மணிநேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் சுமூகமாக நடந்தது. 3 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதித்தோம்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்திய வரலாற்றில் 151 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். இது மிகவும் தவறான அணுகுமுறை. இதற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். 

கட்டட திறப்பு விழாவுக்குச் செல்லும் பிரதமர் நாடாளுமன்றம் வர மறுக்கிறார். 
நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர், உள் துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com