தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம்..: ‘இந்தியா’ கூட்டத்தால் எகிறும் எதிர்பார்ப்பு!

புதுதில்லியில் இன்று நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி தலைவர்கள்(கோப்புப்படம்)
இந்தியா கூட்டணி தலைவர்கள்(கோப்புப்படம்)

புதுதில்லி: புதுதில்லியில் இன்று நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள இந்தியா கூட்டணி தலைவா்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸின் தோல்வி ‘இந்தியா’ கூட்டணிக்கு பாஜகவை எதிர்ப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து சட்டப்பேரவை தேர்தல்களில் பிரசாரம் செய்த காங்கிரஸின் வியூகம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

இதனால் மக்களவைத் தேர்தலை சந்திக்க புதிய வியூகங்களை இந்தியா கூட்டணி வகுக்கவுள்ளது.

முதல்கட்டமாக இந்தியா கூட்டணிக்கான தலைமை தேர்தல் செயலகம், ஒருங்கிணைப்பாளர், செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், தமிழகத்தில் சமாஜ்வாதி மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் இன்று இறுதி செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மேற்கு வங்கம், தில்லி, பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் கூட்டணிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுப்பறி நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸின் படுதோல்வி கூட்டணி கட்சிகள் மத்தியில் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பாஜக பலமாக இல்லை. அதே நேரத்தில் நாங்கள் (எதிா்க்கட்சிகள்) பலவீனமாக உள்ளோம். பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் மூன்று முறை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com