இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது ஒரு நாடகம்: என்சிபி விமர்சனம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது ஒரு நாடகம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது ஒரு நாடகம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அவசர கதியில் தேசியப் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறி அந்த அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இன்று (டிச.24) உத்தரவிட்டது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராடிவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (சரத் பவார் பிரிவு) சேர்ந்த தலைவரான கிளைட் கிராஸ்டோ எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்திருப்பதே ஒரு நாடகம். அவர்களால் இதைச் செய்ய முடியுமென்றால் அவர்கள் ஏன் முதலில் அந்தத் தேர்வை அனுமதித்தார்கள். 

இந்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதன் மூலம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு உதவாத குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுவிடலாம் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் அது தவறான திட்டமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2022-ஆம் ஆண்டு இறுதியில் பிரிஜ் பூஷன் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த டிச.21ஆம் தேதி அவரது ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வானதைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார்.  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்கள் பேசவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com