
அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்துள்ளன.
அயோத்தியில் அமையும் ராமர் கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கட்டுமானப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன. அதன்படி, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோயிலுக்குத் தேவையான மணிகள் சென்றடைந்தன.
அந்த வகையில், தங்கப் பட்டை வேயப்பட்ட மரக் கதவுகள் ஹைதராபாத்திலிருந்து செர்லகறிது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனம், கோயிலின் அனைத்து சன்னதிகளையும் மூடுவதுற்கு 118 மரக்கதவுகளை தயாரித்து வருகிறது.
இன்னும் ஏராளமான கதவுகளை தயாரிக்கத் தயாராக இருப்பதாகவும், 9 அடி உயரமுள்ள 18 கதவுகள் தயாராகியிருப்பதாகவும், அவை ஜனவரி 1ஆம் தேதி கோயிலில் பொருத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிக்கு பல்வேறு நிறுவனங்களிடையே போட்டி போட்டு, தங்கள் திறமையை நிரூபித்து, ஹைதராபாத் தனியார் நிறுவனம் இந்தப் பணியை பெற்றிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமா் கோயில், பிரத்யேக குடிநீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுடன் அமைய பெற்ற ‘சுயசாா்பு’ வளாகமாக இருக்கும் என கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறியுள்ளார்.
மேலும், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூலவரான குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை, ஜனவரி 21, 22-ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பு நடைபெற்றது.
பணிகளை விவரித்து அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், ‘70 ஏக்கா் கோயில் வளாகத்தில் 70 சதவீதம் பசுமையான பகுதியாக அமைக்கப்படும். இரண்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பிரத்யேக மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு ஆகியவை அமைந்த ராமா் கோயில் சுயசாா்பு வளாகமாக இருக்கும்.
அதேபோல், கோயில் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படை பணியமா்த்தப்படுவா். கோயிலுக்காக அமைக்கப்பட்ட நிலத்தடி நீா்த்தேக்கத்திலிருந்து பெறும் நீரை இவா்கள் பயன்படுத்துவாா்கள்.
கோயில் வளாகத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) வசதியும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நுழைவாயிலில் இரண்டு சாய்வுதளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் 392 பிரம்மாண்ட தூண்கள் இருக்கும். அயோத்தியில் உள்ள குபோ் திலாவில் ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது’ என்றாா்.
ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் மூலவா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.