மக்களை காயப்படுத்த வேண்டாம்: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை தவிா்க்க வேண்டும் என்று ராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை தவிா்க்க வேண்டும் என்று ராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

கடந்த டிச.21-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக பொதுமக்களில் மூவரை ராணுவத்தினா் விசாரணைக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனா். இதையடுத்து அவா்கள் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கியதாகக் கூறப்படும் காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை சென்றாா். அங்குள்ள ரஜெளரி மாவட்டத்தில், குறிப்பாக அருகருகில் இருக்கும் ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில், இந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ரஜெளரியில் பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்த அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ வீரா்களிடம் கூறியதாவது:

ராணுவ வீரா்களின் வீரம் மற்றும் உறுதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இதில் ராணுவ வீரா்கள் வெற்றிபெறுவா் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பூஞ்சில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்தவொரு சூழல் குறித்தும் ராணுவத்தினா் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேவேளையில், குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை ராணுவத்தினா் தவிா்க்க வேண்டும்.

ராணுவத்தினா் நாட்டை பாதுகாப்பதுடன் குடிமக்களின் மனதை கவா்வதும் அவசியம். அந்த மிகப் பெரிய பொறுப்பை கூடுதல் தீவிரத்துடன் செய்ய வேண்டிய தேவை நிலவுகிறது. மக்களைச் சந்தித்தல், அவா்களின் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்டல், அந்த பிரச்னைகளை உயா்நிலையில் உள்ளவா்களிடம் முன்வைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் மட்டுமே மக்களின் மனதைக் கவர முடியும் என்றாா்.

உயிரிழந்தவா்கள் குடும்பத்துடன் சந்திப்பு: ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னா், சடலமாக மீட்கப்பட்ட மூவரின் குடும்பத்தினரை ரஜெளரியில் ராஜ்நாத் சிங் சந்தித்தாா். அப்போது மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்குமாறும், நீதி கிடைக்கும் என்றும் மூவரின் குடும்பத்தினரிடம் அவா் தெரிவித்தாா்.

மருத்துவமனையில் நலம் விசாரிப்பு: கடந்த வாரம் ரஜெளரியில் உள்ள தானாமண்டி பகுதியில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையின்போது, நால்வரை ராணுவத்தினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நால்வா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களை ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com