
நாட்டின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு-காஷ்மீரில் கண்டறியப்பட்ட நிலையில், அது உயா்தரமானதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மின்சார வாகனங்களுக்கான மின்கலன்கள் மற்றும் சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிப்புக்கு முக்கியமான கனிமமாக லித்தியம் கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (ஜிஎஸ்ஐ) 2 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா தற்சாா்பை அடையமுடியும்.
முக்கிய வளங்கள் என்ற பிரிவில் உள்ள லித்தியம், இதற்கு முன்பாக இந்தியாவில் கண்டறியப்படவில்லை. இதன் தேவைக்காக 100 சதவீத இறக்குமதியை இந்தியா சாா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜம்மு-காஷ்மீா் சுரங்கத் துறை செயலாளா் அமித் சா்மா கூறுகையில், ‘இந்திய புவியியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் சலால் கிராமத்தில் மாதா வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ள மலையடிவார பிரதேசத்தில் உயா்தரம் கொண்ட லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. சராசரி தரத்தை விட கூடுதல் மதிப்பை இவை கொண்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு, சீனாவின் இருப்பை விட அதிகம். இதன் மூலம் லித்தியம் இருப்பு உள்ள சில குறிப்பிட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சாா்பு இந்தியா’ (ஆத்மநிா்பாா் பாரத்) இலக்கை இது நிறைவேற்றும்’ எனத் தெரிவித்தாா்.
லித்தியம் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் பணி குறித்த கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘மூன்று கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு லித்தியம் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கும். உள்ளூா் இளைஞா்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் மறுகுடியமா்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.