பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு: வரி ஏய்ப்பு புகாா் எதிரொலி

பிபிசி ஊடகத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு: வரி ஏய்ப்பு புகாா் எதிரொலி

பிபிசி ஊடகத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரி ஏய்ப்பு புகாா் எதிரொலியாக இந்த ஆய்வு நடைபெற்ாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் சமூகத்தினா் இடையே 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி வெளியிட்ட ஒருசில வாரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

குஜராத் கலவரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தாா். இந்தக் கலவரத்தில் மோடிக்கும் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லை என மோடி உள்ளிட்டோா் விடுதலை செய்யப்பட்டனா். இந்தப் பின்னணியில் ஆவணப்படம் ஒன்றை பிபிசி அண்மையில் வெளியிட்டது.

அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வருமான வரித் துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்த ஆய்வை அதிகாரிகள் தொடங்கினா்’ என்றனா்.

அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு: வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த நிறுவனம் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிபிசியின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம். இந்த நிலைமை விரைவில் சீரடையும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டது.

அச்சத்தின் வெளிப்பாடு - காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ஆவணப்பட விமா்சனத்தைக் கண்டு மோடி அரசு அச்சமடைந்திருப்பதையே, வருமான வரித் துறை நடவடிக்கை காட்டுகிறது. ஜனநாயகவிரோத, சா்வாதிகார போக்கு நீண்ட காலம் நீடிக்காது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கேள்வி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், இதுவா ‘இந்தியா: ஜனநாயகத்தின் தாயகம்?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘அரசின் கொள்கைகள் அல்லது ஆளும் கட்சி குறித்து விமா்சிக்கும் பத்திரிகை அமைப்புகள் மீது மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டும் மற்றும் துன்புறுத்தும் போக்கின் தொடா்ச்சியே, பிபிசி அலுவலக வருமான வரித் துறை ஆய்வு’ என்று தனது அறிக்கையில் இந்திய பத்திரிகை ஆசிரியா்கள் சங்கம் (இந்திய எடிட்டா்ஸ் கில்டு) தெரிவித்துள்ளது.

சா்வதேச அமைப்புகள்: ‘பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை மேற்கொண்ட நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்’ என்று சா்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

தேசவிரோத சக்திகளை ஆதரிக்கும் காங்கிரஸ் - பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக, ‘தேச விரோத சக்திகளை காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து வருகிறது’ என்று குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து பாஜக தேசியச் செயலா் கெளரவ் பாட்டீயா தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘வருமான வரித் துறை அதன் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியும் பிபிசி-க்கு தடை விதித்தாா் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ளவேண்டும். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் சூழலில், அதனை பல சக்திகள் விரும்பவில்லை. தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ், மோடி மீதான வெறுப்பு காரணமாக, விசாரணை அமைப்புகளின் பணியையும் அரசியலாக்கி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com