
மலிவு விலையில் மருந்துப் பொருள்களை விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024-ஆம் ஆண்டு மாா்ச்சுக்குள் 10,000-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தரமான மருந்துப் பொருள்கள் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மருந்தகம் திட்டத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய வேதிப் பொருள்கள்-உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துப் பொருள்கள் துறை இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 2017-ஆம் ஆண்டில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 3,000-ஆக அதிகரித்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் அந்த எண்ணிக்கை 6,000 ஆனது. கடந்த நிதியாண்டு இறுதியில் மருந்தகங்களின் எண்ணிக்கை 8,610-ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 9,000-யை எட்டியுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில், மக்கள் மருந்தகங்கள் 743 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 10,000-ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகங்களில் தற்போது 1,759 வகை மருந்துகளும் 280 அறுவை சிகிச்சை கருவிகளும் விற்கப்படுகின்றன. மருந்துப் பொருள்களானது சந்தை விலையை விட 50 முதல் 90 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.18,000 கோடியை மக்கள் சேமித்துள்ளனா்.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.893.56 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்கப்பட்டன. அதன் மூலம் சுமாா் ரூ.5,300 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.758.69 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் விற்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாக சுமாா் ரூ.4,500 கோடியை மக்கள் சேமித்துள்ளனா்.
மக்கள் மருந்தகத்தை அமைக்க ரூ.5 லட்சம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சுய வேலைவாய்ப்பையும் அத்திட்டம் உறுதிசெய்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பின்தங்கிய மாவட்டங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 லட்சமானது கூடுதல் மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
மகளிா், முன்னாள் ராணுவத்தினா், பட்டியலினத்தோா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் மக்கள் மருந்தகங்களைத் தொடங்கவும் தனி மானியம் வழங்கப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...