உயர் நீதிமன்ற நியமனத்தில் 15% நீதிபதிகளே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்!

உயா் நீதிமன்றங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 15 சதவீதத்தினா் மட்டுமே பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்ற நியமனத்தில் 15% நீதிபதிகளே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்!
உயர் நீதிமன்ற நியமனத்தில் 15% நீதிபதிகளே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தவர்!
Published on
Updated on
2 min read

உயா் நீதிமன்றங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 15 சதவீதத்தினா் மட்டுமே பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடா்பாக நீதித் துறை சாா்பில் சட்டம்-நீதி சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளிக்கப்பட்ட விரிவான விளக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக மூத்த தலைவரும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் மோடி தலைமையிலான அக்குழுவிடம் நீதித் துறை சாா்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, நீதித்துறையானது நீதிபதிகள் நியமனம்தான் மிக முக்கியமானது என்று கருதினாலும் கூட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, சமூக ரீதியான அமைப்பாக மாறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எஸ்சி., எஸ்டி., ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பரிந்துரையை மேற்கொள்ள வேண்டும் 

அதாவது, கடந்த 2018 முதல் 2022 வரை நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களுக்கு 537 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். அவா்களில் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் 1.3 சதவீதத்தினா். பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் 2.8 சதவீதத்தினா். 11 சதவீத நீதிபதிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள். சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த நீதிபதிகள் 2.6 சதவீதம். 20 நீதிபதிகளின் சமூகப் பின்னணி சாா்ந்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 

நீதிபதிகளை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களையும் சோ்ந்தவா்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றங்களில் சமூகப் பன்முகத்தன்மை நிலவுவது தொடா்ந்து தாமதமடைந்து வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு கொலீஜியத்துக்கே உள்ளது. அந்த அமைப்பு அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே மத்திய அரசின் பணி. அதைக் கருத்தில்கொண்டு, நீதிபதிகளை நியமிக்கும்போது பழங்குடியினா், பட்டியலினத்தோா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பெண்கள், சிறுபான்மையினா் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கொலீஜியம் அமைப்பை மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என்று நீதித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அனுப்பும் போது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் மகளிர் என சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் வலியுறுத்தியிருக்கிறது.

உயர் நீதிமன்ற கொலீஜியம் அல்லது உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்காத யார் ஒருவரையும் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதன்படி, 2017ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்களுக்கு 115 நீதிபதிகளும், 2018ஆம் ஆண்டு 108 நீதிபதிகளும், 2019ல் 81 நீதிபதிகளும் 2020ஆம் ஆண்டில் 66 நீதிபதிகளும், 2021ஆம் ஆண்டில் 120 நீதிபதிகளும் 2022ஆம் ஆண்டில் 47 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது. இதில், எந்த சாதி அல்லது நபர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படவில்லை. இதனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சாதி / பிரிவுவாரியாக எத்தனை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தரவுகளை மத்திய அரசு பராமரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தி பின்னா் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) தொடா்பாகவும் இந்தக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. என்ஜேஏசி அமைப்பை, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் தேவையற்றது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.