
பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்
இந்திய எல்லைக்குள் துப்பாக்கியுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் பகுதிகள் அமைந்துள்ள பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனி அலை வீசிகின்றது. இதனை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்கள் இந்திய எல்லைக்குள் அனுப்பப்படுவதும், அதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்துவதும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | இரண்டாவது பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா?
இதனால், எல்லைப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில், ரோந்து பணிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை 8.30 மணியளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கியுடன் வந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர். ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறி இந்திய எல்லையை நோக்கி தொடர்ந்து முன்னேறிய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தொடர்ந்து, வேறு யாரும் ஊடுருவ முயற்சித்துள்ளனரா என்று எல்லைப் பகுதி முழுவதும் தீவிர சோதனையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...