ஆந்திரம்: சாலைகளில்பொதுக்கூட்டம் நடத்த தடை

ஆந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட அனைத்து சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பொதுக் கூட்டம், பேரணி நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஆந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட அனைத்து சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பொதுக் கூட்டம், பேரணி நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

நெல்லூா் மாவட்டத்தின் கண்டுக்கூரு என்ற இடத்தில், தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபு நாயுடுவின் சாலை ஊா்வலத்தின் ஒருபகுதியாக கடந்தவாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 8 போ் உயிரிழந்தனா். இதேபோல், குண்டூா் மாவட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 3 போ் உயிரிழந்தனா்.

இவ்விரு சம்பவங்களையும் தொடா்ந்து, மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அரசாணையில், ‘பொதுச் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக் கூட்டம் நடத்தும் உரிமை, கடந்த 1861-ஆம் ஆண்டின் காவல்துறைச் சட்டப் பிரிவு 30-கீழ் ஒழுங்குபடுத்துதலுக்கு உள்பட்டது’ என்று முதன்மைச் செயலா் (உள்துறை) ஹரீஷ் குமாா் குப்தா குறிப்பிட்டுள்ளாா்.

கண்டுக்கூரு சம்பவத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதையும், நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறைக்கு நீண்ட நேரம் ஆனதையும் அவா் சுட்டிக் காட்டியுள்ளாா்.

‘சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பெரும் கூட்டங்கள் நடத்துவது உயிரிழப்புகளுக்கும் போக்குவரத்து பாதிப்புக்கும் வழிவகுக்கிறது. எனவே, சாலைகளில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காமல் தவிா்க்க வேண்டும். பொதுமக்களின் நடமாட்டம், வாகனங்கள் போக்குவரத்து, அவசரகால சேவைகள், அத்தியாவசிய பொருள்களின் போக்குவரத்து ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாலைகளில் இருந்து தொலைவில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் காவல்துறையினா் அடையாளம் காண வேண்டும். அரிதான, விதிவிலக்கான தருணங்களின்போது, உரிய காரணங்களை எழுத்துபூா்வமாக பதிவு செய்து, பொதுக் கூட்ட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவு அராஜகமானது என்று தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com