குடிபோதைக்கு அடிமையானதை மனநிலை சரியில்லாததாகக் கருத முடியாது: உச்ச நீதிமன்றம்

குடிபோதைக்கு அடிமையானதை, மனநிலை சரியில்லாததோடு ஒப்பிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி: குடிபோதைக்கு அடிமையானதை, மனநிலை சரியில்லாததாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

தலைநகர் புது தில்லியில் கடந்த 2009ஆம் ஆண்டு குடிபோதையில் தனது இரண்டு மகன்களைக் கொலை செய்தக் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும், கொலை செய்த போது குடிபோதையில் இருந்ததால் மனநிலை தடுமாற்றத்தில் தவறிழைத்துவிட்டதாக தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குடிபோதையில் இருப்பதையும், குடிக்கு அடிமையாகியிருப்பதையும் மனநிலை சரியில்லாததோடு ஒப்பிட முடியாது என்றும் அவ்வாறு ஒப்பிட்டு குற்ற வழக்கிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 84-ன்படி ஒரு நபர், ஒரு குற்றத்தை இழைக்கும்போது மனநிலை சரியில்லாமல் இருந்து, தான் செய்யும் செயலின் அபாயத்தை அறியாமல் செய்துவிட்டால் அது குற்றமேயில்லை என்று கருதப்படும்.

ஆனால், இந்த வழக்கில், தனது 9 மற்றும் 6 வயது மகன்களைக் கொலை செய்த கொடூர தந்தைக்கு எதிராகவே அனைத்து சாட்சியங்களும் இருக்கும் நிலையில், தந்தைக்கு ஆதரவாக வாதிட, உச்ச நீதிமன்றத்தால் அமர்த்தப்பட்ட வழக்குரைஞர் ஷிகில் சூரி, குற்றவாளி குடிக்கு அடிமையானவர் என்றும், சம்பவம் நடந்தபோது, மதுபோதையில் சரியான மனநிலையில் இல்லை என்றும், இந்த விஷயம், வழக்கு விசாரணையின்போது ஆராயப்படவில்லை என்றும் கூறியருந்தார்.

குற்றவாளி, போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிவதற்குள் குடும்பத்தினரால் அழைத்துவரப்பட்டவர் என்றும், அதனால் அவர் குடிபோதைக்கு அடிமையானவராகவே இருந்தார் என்றும் வழக்குரைஞர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மறுவாழ்வு மையத்தால் இவருக்கு அளிக்கப்பட்ட நடத்தைச் சான்றை ஏற்றுக் கொண்டு, மனநிலை சரியில்லாதவர் என்ற வாதத்தை தள்ளுபடி செய்தது. மேலும், அவர் இந்த கொடூர சம்பவத்தை எந்த அளவுக்கு திட்டமிட்டு செய்திருந்தார் என்பதையும், தனக்கு எதிரான சாட்சியங்களை அவர் மறைத்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதேவேளையில், மனநிலை சரியில்லை என்பதற்காக குற்றவாளி எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் குடிக்கு அடிமையானவர் என்றுதான் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டாரே தவிர, அவரது மனநிலை சரியில்லை என்பது எங்கும் பதிவாகவில்லை, எனவே, அவர் சட்டப்படி மனநிலை சரியில்லாதவராகக் கருதப்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com