ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்: காவல்துறை

அஃப்தாப் கொலை செய்த விவகாரத்தில், ஒரு துண்டு எலும்பும், தலைமுடியும்தான் கொலையை நிரூபிக்க உதவியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்: காவல்துறை


புது தில்லி: தில்லியில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை, அஃப்தாப் கொலை செய்த விவகாரத்தில், ஒரு துண்டு எலும்பும், தலைமுடியும்தான் கொலையை நிரூபிக்க உதவியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக அஃப்தாப் ஆமின் பூனாவாலா கைது செய்யப்பட்டார்.

ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்டதாகக் கூறப்படும் தில்லயின் மெஹ்ரூலி வனப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துண்டு எலும்பு மற்றும் கற்றை முடி மட்டுமே ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க உதவியதாகவும், இந்த மாதிரிகள், ஷ்ரத்தாவின் தந்தை மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகளுடன் ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஎன்ஏ மரபணு குறைவாக இருக்கும் பொருள்களைக் கொண்டு, ஒரு நபரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் உயர்தர மரபணு சோதனை வாயிலாகவே ஷ்ரத்தா வாக்கரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புகளில் மிகக் குறைவான மரபணுக்களே இருந்ததால், மத்திய தடயவியல் ஆய்வகத்தால் ஷ்ரத்தாவின் மரபணுவை உறுதி செய்ய இயலாமல் போனது. இதனால், ஷ்ரத்தாவின் எலும்பு மற்றும் தலைமுடியை டிஎன்ஏ மைடோகாண்டிரியல் ப்ரொஃபைலிங் சோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த மாதிரிகள், அங்குள்ள நிபுணர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் ஷ்ரத்தாவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் புதன்கிழமை காவல்துறைக்குக் கிடைக்கப்பெற்ற நிலையில், ஷ்ரத்தாவின் குடும்ப உறுப்பினர்களின் மரபணுவுடன், ஒரு துண்டு எலும்பும், தலைமுடியும் ஒத்துப்போவதாகத் தெரிய வந்துள்ளது.

ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரங்கள் மிக முக்கியமானவை என்றும், இவை இல்லாவிட்டால், அஃப்தாப்பை காப்பாற்ற, அவரது வழக்குரைஞர், ஷ்ரத்தா கொலை செய்யப்படவேயில்லை. அவர் அஃப்தாப்பிடமிருந்த பிரிந்து வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று வாதிட்டு, குற்றவாளியைக் காப்பாற்றிவிட நேரிடும் என்றும் கருதப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், சில சூழ்நிலை ஆதாரங்கள், அஃப்தாப் தான் இந்த கொலையின் பின்னணியில் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் தொழில்நுட்ப ஆதாரங்களாக, ஷ்ரத்தாவின் கைப்பேசி மற்றும் சிசிடிவி பதிவுகளையும் திரட்டி வருகிறார்கள்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆவணங்களை தில்லி காவல்துறையினர் திரட்டியுள்ளனர். எனவே, ஜனவரி இறுதியில் குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள் என்று கருதப்படுகிறது. ஷ்ரத்தா கொலையில் நவம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அஃப்தாப் அடைக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com