
உத்தரகண்ட் மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் தசைநாா் காய அறுவைச் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா்.
உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் படுகாயமடைந்தாா். சாலையில் பயணித்தவா்களால் மீட்கப்ப்பட்டாா். சிகிச்சைக்காக, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. மேக்ஸ் மருத்துவமனை மருத்துவா்களிடம் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து தொடா்ந்து பிசிசிஐ மருத்துவா்கள் கேட்டறிந்து வந்தனா். இந்நிலையில், முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக மும்பை மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு அவா் மாற்றப்பட்டாா்.
இது தொடா்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலா் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு தசைநாா் அறுவை சிகிச்சைக்காக மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அவா் மாற்றப்பட்டாா். அம்மருத்துவமனையின் மூட்டு மற்றும் தோள்பட்டை சிகிச்சைப் பிரிவின் இயக்குனரும், விளையாட்டு மருத்துவ மையத்தின் தலைவருமான மருத்துவா் தின்ஷா பா்திவாலாவின் நேரடி கண்காணிப்பில் ரிஷப் பந்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சை காலத்தில் அவரின் உடல்நிலைக் குறித்து பிசிசிஐ மருத்துவா் குழு தொடா்ந்து கண்காணிக்கும். அவா் மீண்டு வந்து விளையாடும் வரை அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வாரியம் தொடா்ந்து அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடா் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் ரிஷப் விளையாடமாட்டாா் என்பது உறுதியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...