
தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக - ஆம் ஆத்மி கட்சிகளின் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று, 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பாஜக 104 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.
இந்நிலையில், மாநகராட்சித் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக மாமன்றக் கூட்டம் இன்று கூடியது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | கவுன்சிலர்கள் மோதலால் தில்லி மேயர் தேர்தல் ஒத்திவைப்பு!
இதற்கிடையே, ‘ஆல்டா்மென்’ எனப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த 10 உறுப்பினா்களை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், தில்லி அரசின் ஒப்புதலின்றி பரிந்துரைத்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு எழுப்பியது.
இந்நிலையில், இன்று காலை தில்லி மாமன்றக் கூட்டம் கூடியவுடன் நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, பாஜக - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூச்சலிட்டதுடன் மாறிமாறி தாக்கிக் கொண்டதில் சில கவுன்சிலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர மாமன்ற வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...