திருப்பதியில் தங்கும் விடுதி அறைகளின் வாடகை உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருமலை திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதிகளின் அறைகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
திருப்பதியில் தங்கும் விடுதி அறைகளின் வாடகை உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!
Published on
Updated on
2 min read


திருமலை: திருமலை திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதிகளின் அறைகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

திருமலை ஏழுமலையான் கோயிலில் பெருமாளை தரிசிப்பதற்காக நாள்தோறும் லட்சக் கணக்கான பக்தா்கள் திருமலை வந்து செல்கின்றனர். திருமலை வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஏழாயிரம் அறைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான சார்பில் வாடகைக்கு விடப்படுகிறது. 

இந்நிலையில், திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளின் அறைகளின் வாடகையை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உயர்த்தி உள்ளதால், சாமானிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கௌஸ்தபம், நந்தகம், பாஞ்சஜன்யம், வகுளமாதா ஆகியவற்றின் தங்கும் அறைகள் விலை ரூ.500, ரூ.600 இல் இருந்து ரூ.1000 ஆக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஜனவரி 1 முதல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் சாதாரண அறையின் வாடகை ரூ.150 இல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல், நாராயணகிரி விடுதி எண்.4 இல் உள்ள அறைகளுக்கான வாடகை ரூ.750 இல் இருந்து ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சிறப்பு வகை அறையின் ஒன்றின் வாடகை ரூ.750 இல் இருந்து ஜிஎஸ்டி உள்படரூ.2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு வகை வீடுகளின் வாடகை ரூ.750 இல் இருந்து 2,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ரூ.50 வாடகைக்கு விடப்படும் எஸ்.எம்.சி, எஸ்.என்.சி, ஏ.எஸ்சி, எஸ்.வி.சி போன்ற விடுதிகள் மற்றும் ரூ.100 வாடகை பெறப்படும்  ராம்பக் கீச்சா, வராக சுவாமி, எஸ்என்ஜிஎச், எச்விடி, சிஏடிசி, டிபிசி, சப்தகிரி வாடகை விடுகளின் வாடகையும் பன் மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

அலிபிரி வாகன சோதனைச் சாவடியில் வாகன கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. 

திருப்பதி திருமலை இடையே இயக்கப்படும் பேருந்து கட்டணம், லட்டு, வடை பிரசாதம் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளின் வாடைகை உயர்த்தியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆந்திரம் மாநில பாஜக மாநிலத் தலைவர் சோமு வீரராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று கூறி விடுதி அறைகளின் வாடகையை உயர்த்துவது ஓரளவுக்கு நியாயம்தான். ஆனால், சில வகை தங்கும் விடுதிகளில் தற்போதுள்ள தொகையை விட மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, இதை சாதாரண பக்தர்களால் செலுத்த முடியாது" என்றும், இந்த முடிவுக்கான காரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்க வேண்டும்.

மேலும், “பக்தர்கள் மீது சுமத்தப்படும் சுமைகளைப் பற்றி தேவஸ்தானம் கவலைப்படவில்லை. வாடைகையை உயர்த்துவதற்கு முன் இந்து மத அமைப்புகளுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இந்து கோவில்களில் மட்டும் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சிறப்பு வகை வீடுகளின் வாடகை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.'' 

சாமானிய பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்திற்கு சோமு வீரராஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com