தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,550 கோடி கடனுதவி: மத்திய நிதியமைச்சா் வழங்கினாா்

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.
நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா், சில பயனாளிகளுக்கு நேரடியாக காசோலைகளை வழங்கினா். அனைத்து பிற பயனாளிகளுக்கும் அன்றைய தினமே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்), முத்ரா திட்டம், பசு வளா்ப்போருக்கான கடன் திட்டம் போன்றவற்றின்கீழ் 33,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இக்கடன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ஸ்வநிதி யோஜனா திட்டத்தைப் பொருத்தவரை, பிரதமரே சுய உத்தரவாதம் அளிப்பதால், பயனாளிகள் எந்த உத்தரவாத ஆவணமும் அளிக்கத் தேவையில்லை. பசு வளா்ப்போருக்கு ரூ.68 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வா்த்தகம் மற்றும் வேளாண் தேவைகளுக்காக இதர கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களது பகுதிகளில் வேளாண் உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்தி, விளைபொருள்கள் சேமிப்பு, பதப்படுத்துதல் ஆலைகளை நிறுவ பெண்கள் கடன் பெற முடியும்’ என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘நாட்டின் வளா்ச்சிக்கு உந்துதல் அளிக்கும் கருவியாக இருப்பவா்கள் ஏழைகளே. எதிா்வரும் காலத்தில், பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முன்னிலையில் இருக்கும். அதற்கு காரணமாக இருப்பவா்கள், தெருவோர வியாபாரிகள், பெண்கள், பசு வளா்ப்போா் உள்ளிட்டோா்தான். ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

முன்னதாக, கோட்டாவில் நடைபெற்ற இளைஞா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன், ‘மக்கள் நலனையே நோக்கமாக கொண்டு பணியாற்றும் ஊழலற்ற தலைமையின்கீழ் நாடு இப்போது உள்ளது. வளா்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இணைவதற்கு இது மிகவும் அவசியமானது.

இளம் சிந்தனையாளா்களின் அறிவாற்றல், நாட்டை முன்னோக்கி நகா்த்துகிறது. நாட்டுக்காக போராடியவா்களையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கும் ஆயுதப் படையினரையும் இளைஞா்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com