
நிகழாண்டில் சில மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆட்சியின்போது அமைச்சரவையை மூன்று முறை மாற்றியும் விரிவாக்கமும் செய்த நிலையில், தற்போது கடந்த ஜூலையில் ஒருமுறை மட்டுமே தனது அமைச்சரவையை பிரதமா் நரேந்திர மோடி மாற்றியமைத்திருக்கிறாா். இந்த நிலையில், ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவத்தன. இருந்தபோதும், இதுதொடா்பான அதிகாரபூா்வ தகவல் எதுவுமில்லை.
அண்மையில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றி, ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல் மற்றும் தில்லி மாநகராட்சித் தோ்தல் தோல்விகளின் தாக்கமும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதுபோல, நிகழாண்டில் நடைபெறவிருக்கும் கா்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் போன்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களை கருத்தில்கொண்டு அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்ற கருத்தும் பாஜக வட்டாரங்களிடையே நிலவுகிறது.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், பெரிய மாநிலங்களான பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டணிக் கணக்குகளும் அமைச்சரவை மாற்றத்தில் கவனத்தில் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது பிரகாஷ் ஜாவடேகா், ரவிசங்கா் பிரசாத் ஆகியோா் விடுவிக்கப்பட்டு, புதிதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்த முறை மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவைச் சோ்ந்த எம்.பி.க்களுக்கும், மறைந்த லோக்ஜன சக்தி கட்சித் தலைவா் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் ஆகியோருக்கும் அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
கட்சியிலும் மாற்றம்: வரவிருக்கும் மக்களவைத் தோ்தலை மனதில் வைத்து கட்சியின் முக்கிய நிா்வாகிகளையும் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.