
சபரிமலையில் ஜனவரி 12ஆம் தேதி வரையிலான 56 நாட்களில் ரூ.310 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை காலத்தில் ரூ.231.55 கோடியும் மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ.78.85 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது.
இதையும் படிக்க- ஜன. 16-ல் ரேஷன் கடைகள் இயங்காது: தமிழக அரசு
தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை கோவிலில் வரும் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மகர ஜோதி தரிசனத்தை காண ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 14 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 நாள்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது. இனி மகரஜோதி தரிசனம் காண விரும்புபவர்கள் உடனடி பதிவு மூலம் மட்டுமே பதிவு செய்து தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...