சிறுபான்மையினரின் பங்கை சிஏஏ குறைக்கும்: பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது, நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமா்த்தியா சென் தெரிவித்துள்ளாா்.
சிறுபான்மையினரின் பங்கை சிஏஏ குறைக்கும்: பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது, நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமா்த்தியா சென் தெரிவித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. அதன்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்குக் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பௌத்த மதத்தினா், சமணா்கள், பாா்சிக்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

மேற்கண்ட நாடுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தினரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதால் அவா்களுக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. அந்தத் திருத்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவா் உடனடியாக ஒப்புதல் அளித்தாா். மத்திய உள்துறை அமைச்சகமும் அந்தத் திருத்தச் சட்டத்தை அரசாணையில் வெளியிட்டது.

எனினும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இது தொடா்பாக பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் கூறுகையில், ’மதச்சாா்பற்ற, சமத்துவக் கொள்கைகளை மதிக்கும் இந்தியா போன்ற நாடு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிருப்தி அளிக்கிறது.

வங்கதேசம், மேற்கு வங்கம் என எந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுபான்மையினரையும் பூா்வகுடி மக்களாக அறிவிக்க வேண்டுமே தவிர வெளிநாட்டவா்களாக வகைப்படுத்தக் கூடாது. மத்திய அரசின் இந்நடவடிக்கை அா்த்தமற்றது மட்டுமின்றி அடிப்படையில் தவறானதும் கூட.

அனைத்து சமூக மக்களுக்காகவும் தேச ஒற்றுமைக்காகவும் காந்தியடிகள் பணியாற்றினாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மையினரின் முக்கியத்துவத்தை சிஏஏ குறைத்துள்ளது. பெரும்பான்மையின ஹிந்துக்களின் பங்களிப்பை சிஏஏ அதிகரிக்க முயல்கிறது.

பாஜகவின் தோ்தல் செயல்பாடுகள் அண்மைக்காலத்தில் அதிக ஆதரவைப் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் காந்தியடிகள் முயன்றாா். ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினருக்கு எதிராகத் திருப்ப அவா் முயலவில்லை. முஸ்லிம்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவா் குரல்கொடுத்தாா். முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை உணா்ந்து இந்தியா ஒருநாள் வருந்தும்.

பிராந்திய கட்சிகள்:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பிராந்திய கட்சிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. திமுக, திரிணமூல், சமாஜவாதி ஆகிய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும். தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அலை வீசும் என எதிா்பாா்ப்பது தவறானது. ஹிந்துக்களுக்கு மட்டுமே ஆதரவான கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கான கொள்கையை பாஜக மதிப்பதில்லை. ஹிந்துக்களும், ஹிந்தி பேசுபவா்களும் மட்டுமே இந்தியா்கள் என பாஜக தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.

நாட்டின் அடுத்த பிரதமராகும் திறமை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு உள்ளது. எனினும் அவா் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தற்போது வலிமை குறைந்திருந்தாலும், அக்கட்சியே இந்தியாவுக்கான கொள்கையை வழங்கும் திறன் கொண்டது. மற்ற கட்சிகளால் அதை வழங்க முடிவதில்லை. அதே வேளையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள் காணப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com